மதுரை சம்பவம் 🚌📚

மதுரை. எப்போதும் என்னை பரவசத்தில் ஆழ்த்திய இந்த மாநகருக்கான முந்தைய பயணங்களின் நினைவுகளோடு அநேக மாதங்களுக்குப் பிறகு இன்று அந்நகருக்கு பயணப்பட்டேன். பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே என்னுடைய மனம் பெயரிட முடியாத உணர்வுகளில் திளைக்கத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்திருப்பது உள்ளபடியே உவப்பைத் தந்திருந்தாலும், அச்சமயத்தில் என் மனதை ஆட்கொண்டிருந்த உணர்வுகளுக்கு என்னால் காரணம் கற்பிக்க முடியவில்லை. ஐந்து நிமிடம். பத்து நிமிடம். நடத்துனர் சீட்டு கொடுக்கிறார். பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. என் மனம் அந்த உணர்விலிருந்து விடுபடவில்லை. இதுவரை என் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை நல்ல நிகழ்வுகள் வரிசை கட்டிவந்து என்னிடம் குசலம் விசாரிக்க ஆரம்பித்தன. மனதிலே இதுநாள் வரை நினைத்து நினைத்துப் புழுங்கிக் கொண்டிருந்த வேண்டாத சில எண்ணங்கள் விடைபெற்றுக் கொண்டன. முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை நிரந்தரமாக குடிகொண்டுவிட்டதைப் போன்றதொரு உணர்வு. ஒரு மணி நேரத்தில் ஆரப்பாளையத்தில் இறங்கும்வரை (இறங்கியதும்தான் என்னிடம் செல்பேசி என்கிற ஒன்று இருப்பதே நினைவுக்கு வந்தது!) என்னால் கலவையான இந்த உணர்வுகளில் இருந்து விடுபட முடியவில்லை. முன்னும் இதுபோலே புது அனுபவம் கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலை!

———

முதன்முதலாக நான் ஒரு புத்தகக் காட்சியைப் பார்த்தது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் வைத்துதான். அவ்வளவு புத்தகங்களை ஒருசேர பார்த்தபோது புத்தகங்களின் மேல் ஈடுபாடுள்ள பத்து வயது சிறுவனின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். அந்த வயதின் விருப்பதிற்கேற்ப விநாடி வினா 1000, சிறுவர் கதைகள் (தெனலிராமன், பீர்பால் வகையறாவாக இருக்கலாம்), எழுதுவதற்காக கோடு போட்ட வண்ண நோட்டு புத்தகம் ஒன்று ஆகியவற்றை புத்தகக் காட்சியில் அப்போது வாங்கியதாக நினைவு. அதன் பிறகு தொடர்ச்சியாக மதுரை புத்தகக் காட்சிக்கு அப்பா அழைத்து சென்றதும், ஒருகட்டத்திற்குப் பிறகு நானே தனியாக சென்றுவர ஆரம்பித்ததும் வழக்கமானது. உயிர்மை அரங்கில் இருந்த மனுஷ்ய புத்திரனிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு இதழியல் படிக்க விரும்புகிறேன் என்று சொன்னதும் (அப்போது பதினோறாம் வகுப்பில் இருந்தேன்) அதற்கு அவர் ஆலோசனைகள் சொன்னது, காலச்சுவடு அரங்கில் ஒவ்வொரு புத்தகங்களாக எடுத்து பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டு, ‘தம்பி, இந்த வயசுல நீ இதெல்லாம் வாசிக்கிறியா?’ என்று வினவிய பத்தினாதனிடம் (பிற்பாடு திண்டுக்கல்லில் புத்தகக் காட்சி தொடங்கப்பட்டபோது எல்லா நாட்களும் அங்கு சென்று வந்ததால் அவருடன் நட்பு ஏற்பட்டது) பதில் சொல்லத் தெரியாமல் நின்றது, விகடனில் அப்போது வெளியாகிக் கொண்டிருந்த ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசித்துக் கொண்டிருந்த பற்றில் மதுரை புத்தகக் காட்சிக்கு ராஜு முருகன் வருவதாக அறிந்து குறிப்பிட்ட அந்த நாளில் அங்கு சென்றது என மதுரை புத்தகக் காட்சியுடனான என்னுடைய நினைவுகள் சுவாரஸ்யமானவை. சென்னையில் ஏற்கனவே நீண்ட காலமாக புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது என்று தெரியவரவும், அதற்கு தொடர்ச்சியாக சென்று வருபவர்கள் அதுபற்றிய கதைகளை கூறக் கேட்கவும், சென்னையின் மீதான பிரேமையினூடே ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் புத்தகக் காட்சிக்கு எப்போது செல்லப்போகிறோம் என்கிற கனவும் வளர்ந்தது. சென்னை புத்தகக் காட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக சென்று வருகிறேன் என்றாலும், இத்தனை ஆண்டுகால தொடர்ச்சியான மதுரை புத்தகக் காட்சிக்குச் செல்வதற்கான சூழல் சென்ற ஆண்டு வாய்க்கவில்லை. இந்த ஆண்டும் தவறவிட்டுவிடக்கூடாது என்பதால் இன்று புத்தகக் காட்சிக்கு சென்று வந்தேன்!

Raju

———

புத்தகக் காட்சியில் வாங்கிய நூல்களும் சில குறிப்புகளும்

  • என்.பி.டி – சிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்
  • என்.பி.டி – முதலில்லாததும் முடிவில்லாததும் – ஸ்ரீரங்க
  • என்.பி.டி – பக்கிம் சந்திரரின் கட்டுரைகள் – தொகுப்பு: அமித்ர சூதன் பட்டாச்சார்யா
  • மணற்கேணி – மாமிசம் (சிறுகதைகள்) – தமிழில்: ரவிக்குமார்
  • பாரதி புத்தகாலயம் – நிலநடுக் கோடு – விட்டல் ராவ்
  • திராவிடர் கழக (இயக்க) வெளியீடு – மண்டல் குழுவும் சமூகநீதியும் – கி.வீரமணி
  • என்.சி.பி.எச் – தமிழ்ப் பண்பாட்டில் சினிமா – கார்த்திகேசு சிவத்தம்பி
  • என்.சி.பி.எச் (அரங்கு) – Hindi Against India: The Meaning of DMK – Mohan Ram
  • தமிழினி – மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு – கணியன் பாலன்

— சென்னையை மையமாக வைத்து அசோகமித்திரன் எழுதிய ‘ஆகாயத் தாமரை’யை தியாகராய நகர் நியூ புக் லேண்டில் வாங்கிய கையோடு பனகல் பூங்காவிலும், தன் படைப்புகளுள் பெரும்பாலானவற்றை அவர் எழுதிய நடேசன் பூங்காவிலும் வைத்து வாசித்தேன். போலவே, குறிப்பிட்ட சில படைப்புகளை அதன் கதைக்களங்களில் சென்று வாசிக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதே தியாகராய நகரில் இருந்த எலூர் வாடகை நூலகம் சென்ற ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டபோது, அங்கு எடுத்த மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை, கர்நாடகம் முழுக்க நான் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின்போது வாசிப்பதற்காக உள்ள புத்தகங்களின் பட்டியலில் வைத்திருக்கிறேன். அந்தப் பட்டியலில் சிக்கவீர ராஜேந்திரன் நாவலும் இணைகிறது.

Masthi.jpg

— ஸ்ரீரங்க பற்றிய இந்தக் குறிப்பை நண்பர் ஸ்ரீநிவாச கோபாலன் எப்போதோ அனுப்பியிருந்தார். தமிழின் மிகச் சிறந்த இலக்கிய வாசகர்களுள் ஒருவராக தஞ்சை ப்ரகாஷின் நினைவாக முதலில்லாததும் முடிவில்லாததும்.

Sri Ranga.jpg

பக்கிம் சந்திரரின் கட்டுரைகளை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தேன். கண்டிப்பாக நான் வாசிக்க வேண்டிய புத்தகம் எனத் தோன்றவேஅதை எடுத்துக் கொண்டேன்.

Chandra

— நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர் த.ராஜனுடன் அலைபேசினேன். எப்போதும் போல் பா.வெங்கடேசனின் ராஜன் மகள், தாண்டவராயன் கதை வழியே பாகீரதியின் மதியத்தை ஒட்டி பேச்சு அரசியல் புனைவுகளில் வந்து நின்றது. கிடைத்தால் உடனே வாங்கிவிடுங்கள் என்று அவர் பரிந்துரைத்ததன் பேரில் மாமிசம் வாங்கினேன்.

Maamisam

— விட்டல் ராவின் ‘வாழ்வின் சில உன்னதங்கள்’ என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்களுள் ஒன்று. அறுபதுகளில் தொடங்கி மெட்ராஸின் பழைய புத்தகக் கடைகள், அதன் விற்பனையாளர்களினூடே அந்த காலகட்டத்து மெட்ராஸை பதிவு செய்திருக்கும் அதிமுக்கியமான புத்தகம் இது. அதே காலகட்டத்து மெட்ராஸை மையமாக வைத்து ராவ் எழுதியிருக்கும் நாவல்தான் ‘நிலநடுக் கோடு’. ‘பாவண்ணனை கொண்டாடுவோம்’ நிகழ்வுக்காக சென்னையில் இருந்த கலாப்ரியாவை, சுப்ரமண்ய ராஜு கட்டுரைக்காக சந்திக்கச் சென்றபோது அங்கு விட்டல் ராவும் இருந்தார். அவரை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தெரிந்திருந்தால், வாழ்வின் சில உன்னதங்கள் புத்தகத்தை கையோடு எடுத்துச் சென்றிருப்பேன். அப்போது, அவர் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்ததால், விரிவாக பேச முடியவில்லை. நாவலை வாசித்ததும் அழைத்து பேச வேண்டும்!

— பி.பி.மண்டலின் நூறாவது பிறந்த தினத்தையும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய இருபத்தி ஐந்தாம் ஆண்டு தினத்தையும் ஒட்டி The Wire தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரையை வாசித்த தாக்கத்தில் மண்டல் குழுவும் சமூகநீதியும் வாங்கினேன்.

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா. நான்கு ஆண்டுகளாக சென்னை புத்தகக் காட்சிகளிலும், சமீபத்தில் YMCAவிலும் கூட தேடிக் கிடைக்காதது, இன்று கிடைத்தது. 2014இல் வெளியான மூன்றாம் பதிப்பு இது.

Ka.Si

— திராவிட இயக்கம். மிக விரிவாக எழுதவிருக்கிறேன். திராவிடம் இயக்கம் குறித்த தொடர்ச்சியான வாசிப்பும் அதையொட்டி நண்பர்களுடனான உரையாடலும், இதுகுறித்து மேலும் வாசிக்க, எழுத, விவாதிக்கத் தூண்டி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெயரளவில் மட்டும் தெரிந்து வைத்திருந்த திராவிட இயக்கத்தை உணர்வுப் பூர்வமான மட்டும் அணுகும் தளத்தில் இருந்து அறிவுப் பூர்வமாகவும் விமர்சனப் பூர்வமாகவும் அணுக ஆரம்பித்திருக்கிறேன். எதிர்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த தொடர் வாசிப்பு எனக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் தில்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்பினேன். சூழல் வாய்க்கவில்லை. எனினும், அங்கு வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய SEMINAR இதழை வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். செப்டம்பர் 29 & 30 ஆகிய தேதிகளில் ரோஜா முத்தையா நூலகத்தில் நடைபெறவிருக்கும் ‘திராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள்’ கருத்தரங்கம் குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே பதிவு செய்துவிட்டேன். இந்து தமிழில் இண்டர்ன்ஷிப்பில் இருந்தபோது சுரேஷுடன் நட்பு ஏற்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று வரும் சுரேஷ் மிகத் தீவிரமான இடதுசாரி. எதிர்காலத்தில் முக்கியமான ஒரு செயற்பாட்டாளராக வருவான் என்று நம்புகிறேன். புத்தகக் காட்சியில் சுரேஷ் தன்னுடைய இரண்டு நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தான். இருவரும் திராவிட இயக்க சித்தாந்ததில் தீவிர ஈடுபாடு உடையவர்களாகவும் அதுகுறித்த விமர்சனப் பார்வையோடு உரையாடலை முன்வைப்பவர்களாக இருந்தனர். திராவிட இயக்கம் குறித்த நூல்கள் பற்றிய பேச்சில் இருவரும் சிலவற்றை பரிந்துரைத்தனர். ஏற்கனவே வாசிப்பில் இருக்கும் தெற்கிலிருந்து ஒரு சூரியன் (மீள் வாசிப்பு), FRONTLINE Karunanidhi Issue, SEMINAR இதழ், திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும், திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து EPWவில் வெளியான கட்டுரைகள் (ஒரு தொகுப்பே வைத்திருக்கிறேன்), பாகீரதியின் மதியம் ஆகியவற்றோடு அவர்கள் பரிந்துரைத்த Hindi Against India: The Meaning of DMKவும் இணைகிறது.

Hindi

— பேராசிரியர் கைலாசபதியின் ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ புத்தகத்தை சமீபத்தில்தான் வாங்கினேன். இன்று காலை வீட்டிலிருந்து கிளம்பும் முன் ஃபேஸ்புக்கில் கே.என்.சிவராமன் எழுதியிருந்த குறிப்பு, கைலாசபதியின் புத்தகத்தை நினைவுபடுத்தி, கணியன் பாலனின் புத்தகத்தை உடனடியாக வாங்கத் தூண்டியது. விரிவாக இதுகுறித்து எழுதத் தோன்றுகிறது. இரண்டு புத்தகங்களை வாசித்துவிட்டு எழுதினால் நன்றாக இருக்கும். எழுதுகிறேன்.

———

பங்கெடுக்கவிருக்கும் ‘திராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள்’ கருத்தரங்கில் விவாதிக்கப்படும் விஷயங்களை முழுமையாக உள்வாங்க பார்வையாளர்களான நாமும் கொஞ்சம் ஹோம்-ஒர்க் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, திராவிட இயக்கம் குறித்த வாசிப்பை தீவிரப்படுத்துகிறேன். இந்த மாதம் முழுக்க திராவிட இயக்கம் குறித்து மட்டும் வாசிக்க, எழுத முடிவெடுத்திருக்கிறேன்.

———
வீடு, திண்டுக்கல்.
இரவு 11:19 மணி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s