என்னுடைய இந்த முறையீட்டுக்குத் தமிழ்ப்பிரபா அளித்திருந்த பதிலும், அதற்கு என்னுடைய மறுபதிலும், இன்னும் சில எதிர்வினைகளும்
‘நீலம்’, தமிழ்ப்பிரபா: சில கேள்விகள்
வணக்கம் அருண்பிரசாத்,
நான் உங்களிடம் கட்டுரை கேட்டது உண்மைதான். நீங்கள் நிச்சயம் தருகிறேனெனச் சொன்னீர்கள். அத்துடன் நீலம் இதழில் வேலை வாய்ப்பு பற்றிக் கேட்டீர்கள். உங்கள் அனுபவத்திற்கு ஏற்றார் போல் சம்பளம் கொடுக்க இயலாத அளவுக்கு நீலம் இதழ் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறதென்றும், ஆனால், கட்டுரைக்கு நிச்சயம் மதிப்பூதியம் தருவோம் என்றுதான் சொன்னேன்.
நீலம் Youtube’ல் சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆவணப்படத்தை பார்த்ததாகவும் அதைப் போன்ற ஒன்றை பதிவு செய்ய விரும்புவதாகவும் நீங்கள் சொன்னபோது, ஆவணப்படம், ஆராய்ச்சி கட்டுரை ஏதேனும் எழுத ஒரு தளமும் இன்னபிற உதவியும் தேவைப்பட்டால் நீலம் எப்போதும் தயாராக இருக்கிறதென்று சொன்னேன். உங்களுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜை நிதானமாகக் கேட்டாலே இதெல்லாம் தெரியும்.
கட்டுரைக்கு பணம் தருகிறோம் என மிகத் தெளிவாக சொல்லியும் இலவசமாக கேட்டோம் என்கிற ஒரு பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிற இந்த புரட்டல்தான் எழுத்தில் நீங்கள் இதுகாறும் கடைபிடித்து வருகிறதா!
இதழுக்கு ஒரு கட்டுரை எழுதி நாங்கள் பணம் தரவில்லை என்கிற பட்சத்திலாவது உங்களுடைய கேள்விகள் பொருளுள்ளதாக இருக்கும். உங்களுடைய தன்முனைப்பு அதன் உச்சத்தில் இருக்கிறது. இதைக் கடந்து வந்தவன் என்கிற முறையில் என்னால் அதைப் புரிந்துக் கொள்ளவும் முடிகிறது.
நீலம் இதழில் இதுவரையும் சரி, இனிமேலும் சரி யாரையும் இலவசமாக எழுதச் சொல்லிக் கேட்டதில்லை. கேட்கப் போவதுமில்லை.
ஒரு இதழ் வேண்டுமென நீங்கள் கேட்டவுடனே உங்கள் முகவரியை இதழாசிரியர்க்கு அனுப்பி உங்களுக்கு ஒரு இதழ் அனுப்பச் சொன்னேன். இதழ் இன்னும் வந்து சேரவில்லையெனில் எனக்கு நினைவூட்டி இருக்கலாம். இதை ஒரு குற்றச்சாட்டாக எழுத வேண்டுமென காத்திருக்கும் கள்ள மௌனம் அதற்கு காரணமாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பரவாயில்லை.
நான் உங்களை எடுத்த எடுப்பிலேயே ‘டா’ போட்டு அநாகரிகமாக பேசியதாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஏற்கனவே உங்களிடம் நான் உரையாடியபோதும் அந்த ‘டா’ போட்டு தான் அழைத்திருக்கிறேன். அது அசௌகர்யமாக இருந்தால் அப்போதோ அல்லது அதற்குப் பிறகோகூட என்னிடம் கூறி இருக்கலாம். ஆனால், அப்போதெல்லாம் விட்டுவிட்டு காத்திருந்து அதை இப்போது நீங்கள் சொல்லும் இந்த தருணம் எவ்வளவு சூழ்ச்சியானது.
என் தம்பி போன்றவர்களை நான் ஒருமையில் அழைப்பது அவர்களை அநாகரிப்படுத்துவதற்காக அல்ல. என்னுடைய இயல்பே அதுதான். என் வழக்கு மொழியும் அதுவே. என்னுடன் பழகுபவர்களுக்கு அது தெரியும். இதற்காகவெல்லாம் நான் என்னை மாற்றிக் கொள்ள இயலாது. என் பாதையில் நீங்கள் ஒரு அனுபவம் அவ்வளவுதான்.
// நான் உங்களிடம் கட்டுரை கேட்டது உண்மைதான். நீங்கள் நிச்சயம் தருகிறேனெனச் சொன்னீர்கள். அத்துடன் நீலம் இதழில் வேலை வாய்ப்பு பற்றிக் கேட்டீர்கள். // நீலம் இதழில் வேலை வேண்டி நான் உங்களிடம் வந்தேன் என்பதாக இந்த வரி வெளிப்பட்டிருக்கிறது. மதிப்பூதியம் பற்றிப் பேச வேண்டும் என்று நான் கேட்டபோது, ‘வேலை வேண்டுமா’ என்று தொடங்கியது நீங்கள். தற்சமயம் நான் வேலைதேடிக் கொண்டிருப்பதால், அங்குள்ள பணிவாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ளலாமா என்றேன். அதையொட்டி இதழியல் சார்ந்து எனக்கிருக்கும் யோசனைகளில் ஒன்றிரண்டைப் பகிர்ந்தேன். இதை நான் பணிவாய்ப்பு கேட்டுவந்து நின்றதாகத் திரிப்பது அபாண்டம். விவாதிக்கப்படும் விஷயத்துக்கு வெளியே இது இருக்கிறது என்பதால், பதிவில் இதைக் குறிப்பிட்டு எழுதவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.
இங்கு என்னுடைய முறையீடு உங்கள் அணுகுமுறை சார்ந்தது என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். ‘நீலம் இதழில் பங்களிப்பதன் மூலம் உங்கள் ப்ரொஃபைலை மேம்படுத்திக் கொள்ள முடியும்’, என்றுதான் இதுவரை வெளியான இதழ்களில் பங்களித்தவர்களிடம் படைப்புகளை வேண்டும்போது உங்கள் அணுகுமுறையாக இருந்ததா? இது மதிப்பூதியத்தின் உத்தரவாதம் குறித்தச் சந்தேகங்களை எனக்கு உண்டு பண்ணியது. விளம்பரக் கட்டணங்கள் என் பார்வைக்கு வரவே, அத்தோடு உங்கள் அணுகுமுறையும் சேர்ந்து என் தொழில் சார்ந்து நான் அவமதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக என்னை உணரச் செய்தது. எனவே தான் இதைப் பொதுவில் எழுத முடிவெடுத்தேன். அதற்காகவே என்னுடையச் செயல்பாடுகளைப் பட்டியலிட்டேன், அது உங்களுக்குத் தன்முனைப்பின் உச்சமாகத் தெரிந்தால் நான் பொறுப்பாக முடியாது.
பார்வைக்கு ஒரு இதழ் வேண்டினேன் என்றால் அது என் கைக்கு வந்துசேரும்வரை அது அனுப்புநரின் பொறுப்பில் இருக்கிறது என்பதே என்னுடைய புரிதல்; நானாக வந்து மீண்டும் இதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இதழ் கிடைக்காதபட்சத்தில் நீங்கள் அனுப்ப விரும்பவில்லை என்றே எடுத்துக் கொள்ள முடியும்.
ஃபேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானவர்களில் எத்தனையோ பேருடான நட்பு ஒருமையிலும், ‘டா’ என்றும் அழைக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. அப்படி அழைத்தால் பிரச்சினை இல்லை என்று நான் கேட்டுக் கொண்டாலும்கூட, எப்போதும் மரியாதையுடன் அழைக்கும் என்னுடைய நண்பர்களில் பெரும்பாலானோர் என் வயதில் இரண்டு மடங்கு பெரியவர்கள்.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நம்முடைய முதல் ‘சந்திப்பு’ குறித்து நான் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வில் அரங்கத்துக்குள் நுழையும் முன்போ, நிகழ்வு முடிந்து வெளியேறும்போதோ இருவரும் அருகில் பார்த்துக்கொள்ள நேர்ந்தமையால் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம், அப்போது நீங்கள் ‘டா’ என்றீர்களா, ‘ஐயா’ என்றீர்களா என்பது என் நினைவில் இல்லை; இதுவே நம்முடைய முதல் ‘சந்திப்பும்’ ‘உரையாடலும்’. தனிப்பட்ட முறையில் அன்றி, ஃபேஸ்புக் மூலமே நாம் ஒருவரை ஒருவர் அறிவோம்; என்னுடைய இயல்பை நீங்களோ, உங்களுடைய இயல்பை நானோ அறிந்துகொள்ளும் வகையில் நாம் நேரடியாகப் பழகியதில்லை. சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடம் நேரில் பேசிக் கொண்டதில்லை. அந்த வகையில் இது எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும், உங்களை மாற்றிக் கொள்ளச் சொல்லி நான் எங்கும் எழுதவில்லை; அது என் வேலையும் இல்லை!
நீலம் சார்பாக என்னைத் தொடர்புகொண்டது நீங்களே என்பதால் இது உங்களை நோக்கி எழுதப்படுகிறது என்பதைத் தவிர தனிப்பட்ட வகையில் உங்களைத் தாக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல; மேலும், கொரொனோ சூழல் உருவாக்கிய நெருக்கடியில் [அனைத்துத் தொழில்களும் அடிவாங்கியிருக்கின்றன, என்றபோதிலும்] பணியிழந்த தொழில்முறை இதழாளன் ஒருவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன என்பதைச் சுட்டவே இதைப் பொதுவெளியில் எழுதும் கட்டாயம் ஏற்பட்டது.
நன்றி!
இதையொட்டி எழுந்த மற்ற எதிர்வினைகளை இங்கு வாசிக்கலாம்: https://www.facebook.com/joarunlist/posts/2007635232712853
அன்பின் அருண் !
தற்பொழுது முகநூலில் அவ்வளவு தீவிரம் இல்லை.
உங்கள் அறச்சீற்றம் குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது.
தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
LikeLike