கனலி கலை இலக்கியச் சூழலியல் இணைய இதழின் 13ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. ‘சமகால இலக்கிய முகங்கள்’ என்ற புதிய பகுதியில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கவனப்படுத்தப்பட்டிருக்கிறார். இதில் இடம்பெற்றிருக்கும் அவரது நேர்காணலை க. விக்னேஷ்வரனும் நானும் இணைந்து மேற்கொண்டிருக்கிறோம்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன. ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன; அரசியல், சமூகம், பொருளாதாரம், நுகர்வு கலாச்சாரம் உள்ளிட்டவை சார்ந்து கட்டுரை, விமர்சனம் என அல்புனைவிலும் தொடர்ந்து பங்களித்துவருகிறார். உலகின் முதல் நவீன நாவல் என்று வழங்கப்படும், செர்வாண்டிஸின் ‘டான் கிஹோதே’ (Don Quixote) மீதான இவரது விமர்சன-ஆய்வுக்கட்டுரை (review-essay) சமகாலத் தமிழ் அல்புனைவுத் தளத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்வு (phenomenon).
ஒசூர் தொரப்பள்ளியில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கும் குன்றுகள் ஒன்றின் மரத்தடி நிழலிலும், மின்னஞ்சல்கள் வழியாகவும் இந்த உரையாடல் நிகழ்ந்தது. நேர்காணல் வடிவத்துக்காகத் தொகுக்கப்பட்ட உரையாடலின் பகுதிகள் இங்கு:
“உலகில் இயங்கும் ஒருவரை, ஒருவரில் இயங்கும் உலகத்தோடு இணைப்பதே இலக்கியம்!”
கனலி 13ஆவது இதழை அறிமுகப்படுத்தி க. விக்னேஷ்வரன் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கும் குறிப்பு:
கனலி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
புதிய வருடத்தில் உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த பதிமூன்றாவது இதழ் வழியாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். ஏறக்குறைய இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு வழக்கமான இதழாக இந்த பதிமூன்றாவது இதழைக் கொண்டு வருகிறோம். இந்த இரண்டு மாத இடைவெளி என்பது எங்களுக்கு நிறைய கற்றல்களை அளித்துள்ளது. இரண்டு மாத இடைவெளி என்கிற முடிவால் நிறையத் தயக்கமும் குழப்பமும் மனதில் அடிக்கடி வந்து போனது. ஆனால் இந்த இரண்டு மாத இடைவெளியில் முக்கியமாக நிறைய வாசகர்கள் அதிலும் புதிய வாசகர்கள் கனலியின் பழைய இதழ்கள் மற்றும் சிறப்பிதழ்களை வாசித்துவிட்டு நிறைய பின்னூட்டங்களை எங்களுக்கு அனுப்பி இருந்தார்கள். அவற்றையெல்லாம் பார்க்கும் போது கனலியின் பொறுப்பும் கடமையும் எவ்வளவு கூடியுள்ளது என்பது அறிந்து கொண்டோம்.
கனலி எப்போதும் உங்களின் அந்த இலக்கிய நம்பிக்கைகளுக்கு ஏற்றவகையில் செயல்படும் என்பது திண்ணம் அதேநேரத்தில் முடிந்தவரைக்கும் ஒரு முழுமையான இதழாகத் தான் கனலி எப்போதும் வெளிவரும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம். (நேர்காணல் முதல் சிறார் கதை வரை)
அப்படித் தான் இந்த பதிமூன்றாவது இதழும் வெளிவந்துள்ளது.
பதிமூன்றாவது இதழில் புதிய முயற்சியாக சம கால இலக்கிய முகங்கள் என்கிற பகுதியை அறிமுகம் செய்கிறோம். இந்தப் பகுதியில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் அவர்களின் நேர்காணல், கட்டுரை, அவரின் படைப்புகளைப் பற்றிய விமர்சன கட்டுரை என்று ஒரு சரியான விகிதத்தில் வெளிவந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் புதியதாகச் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கும் இதுவரை சிறுகதைத் தொகுப்பு வெளிவராத எழுத்தாளர்களின் நேர்காணல் தொகுப்பு ஒன்றைச் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளோம்.
மொழிபெயர்ப்புகளில் இந்த முறை இன்னும் வித்தியாசமாகப் பிராந்திய (மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி) மொழிபெயர்ப்புகள் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை வெளியிடுகிறோம்.
தொடர்களில் அன்புக்குரிய எழுத்தாளர்கள் வண்ணநிலவன் மற்றும் ஜெயமோகன் அவர்களின் இரண்டு புதிய தொடர்கள் இந்த இதழ் முதல் வெளிவருகிறது.
பிரெஞ்சிலிருந்து நேரிடையான ஒரு சிறார் கதையை நண்பர் ஈஸ்வரன் செய்துள்ளார்.
எப்போதும் போல இந்த முறை நிறைய சிறப்பான கலவையான சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
புதிய பெண் எழுத்தாளர் ஒருவர் தனது முதல் சிறுகதையை இந்த இதழில் எழுதியுள்ளார்.
பெட்டகம் பகுதியில் எழுத்தாளர் க.மோகனரங்கன் அவர்களின் சிறுகதை ஒன்றை வெளியிடுகிறோம்.
கையில் கிடைக்கும் நான்கு படைப்புகள் போட்டு ஒப்புக்காக ஒரு இதழைத் தயாரிக்கும் பணியை கனலி ஒருபோதும் செய்யாது. அதை இந்த பதிமூன்றாவது இதழ் வாசிக்கும் போது நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.
நண்பர்கள் பதிமூன்றாவது இதழை வாசித்துவிட்டு கனலிக்கு உங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எழுதுங்கள்.
இந்த இதழிற்குப் படைப்புகள் அளித்த உதவிய அனைத்து எழுத்தாளர்களும் மிக்க நன்றி.
நன்றி அடுத்த மாதம் சந்திப்போம்.
பிழை திருத்தம் மற்றும் தட்டச்சு செய்து தந்து உதவிய நண்பர்களுக்கு நன்றியும் அன்பும்.
எப்போதும் அன்புடன்,
கனலி ஆசிரியர் குழு.
