கனலி ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ – ஏன்?

கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிடவிருக்கும் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழின்’ நோக்கம், தேவை சார்ந்த கேள்விகளுக்கு சிறப்பிதழ் ஆசிரியர் சு. அருண் பிரசாத் பதிலளிக்கிறார்.

1) சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த சிறப்பிதழ் ஒன்றை உருவாக்க முயல்வதன் அடிப்படை நோக்கம் என்ன?

இக்கேள்விக்கான பதிலாக அறிஞர் நோம் சாம்ஸ்கியின் மேற்கோள் ஒன்றை முன்வைக்கிறேன்:

“முழுமையான பேரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் விதமான தலைப்புச் செய்திகளை ஒவ்வொரு செய்தித்தாளும் அன்றாடம் வெளியிட வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளில், ஒருங்கிணைந்த மனித சமுதாயம் நீடித்திருக்கப் போவதில்லை. இது மக்களின் அறிவில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில் இதுபோன்று முன்பு நிகழ்ந்ததில்லை. ஒருங்கிணைந்த மனித சமுதாயம் மேலும் இரண்டு தலைமுறைகளுக்குத் தாக்குப்பிடிக்குமா என்பது தற்போதைய தலைமுறை எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. அந்த முடிவு விரைந்து எடுக்கப்பட வேண்டும்; காலம் குறைவாகவே இருக்கிறது.”

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது காலத்தின் கட்டாயம்.

2) சர்வதேச ஊடகங்கள் காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகளை எப்படி அணுகுகின்றன; முக்கியமாக இலக்கியம் என்கிற தரப்பில் இது எவ்வாறு இணைத்து இன்று பேசப்படுகிறது அல்லது எழுதப்படுகிறது?

கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக 2019-2020 காலகட்டத்தில், காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச ஊடகங்களின் அணுகுமுறை அபரிமிதமாக மேம்பட்டிருக்கிறது; தீவிரமடைந்திருக்கிறது. ஊடகப் பெருநிறுவனங்கள் மிக விரிவான தளத்தில் காலநிலை மாற்றம் சார்ந்த இதழியலை அச்சு, காட்சி, ஒலி, இணையதளம் உள்ளிட்ட பிரிவுகளில் முன்னெடுத்திருக்கின்றன. காலநிலை மாற்றம் என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் அறிவியல் உண்மை என்ற மறுதலிக்க இயலா நிலையில் நின்று அவ்வூடகங்கள் காலநிலைச் செய்திவழங்கலை மேற்கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்தும், வெளிப்படுத்தும் வகையிலான சொல்லாடலை மறுசீரமைப்பு செய்தது தொடங்கி அதன் சகல பரிமாணங்கள் குறித்த விரிவான விவாதங்களை முன்னெடுத்திருப்பதன் மூலம் இப்பிரச்சினை குறித்த பொதுமக்களின் புரிதலை ஆழப்படுத்தியிருக்கின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் உலக இலக்கியத்தில் ‘காலநிலை இலக்கியம்’ என்ற வகைமை தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஒன்று, இரண்டு என இதுசார்ந்து வெளிவந்துகொண்டிருந்த நாவல்கள் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகள், இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் இந்த வகைமையில் வெளியாகும் புத்தகங்களின் பட்டியலை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இதுகுறித்த விரிவான கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ‘கனலி’ சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழில் இடம்பெற்றிருக்கிறது.

3) அச்சு, காட்சி, ஒலி ஊடகங்கள் தொடங்கி, இலக்கிய இணையதளங்கள் வரை தமிழக ஊடகங்கள் அவசியம் காலநிலை மாற்றம் பற்றிப் பேச வேண்டும் என்று நீங்கள் கருதுவதற்கான காரணம் என்ன?

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உலகின் மற்ற பகுதிகளில், நம்மில் இருந்து வெகுதொலைவில் நிகழ்ந்துகொண்டிருப்பதான மாயையில் இருந்து நாம் முதலில் வெளிவர வேண்டும். இந்தியாவில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிக வெளிப்படையாகத் தெரியத் தொடங்கிவிட்டன; வெப்ப அலைகள், கணிப்பில் தவறும் புயல்கள் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள், அதிதீவிர மழை, பருவமழை அமைப்பு மாறுதல், வேளாண்மையில் வீழ்ச்சி, உணவுப் பாதுகாப்பு, கடல்மட்ட உயர்வு, கடல்நீர் உட்புகுதல், இடப்பெயர்வு போன்றவை மனிதர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என்றால், புவியில் வாழும் மற்ற உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் அதிபயங்கரமானவையாக இருக்கின்றன; தாவரங்களும் விலங்கினங்களும் மிகப் பெரிய எண்ணிக்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன, அற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் இத்தகைய நிகழ்வுகள் குறித்த அறிதலைப் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தி, புவியின் தற்போதைய நிலை குறித்த புரிதலை அவர்களிடத்தில் நிலைபெறச் செய்யும் முதன்மைப் பொறுப்பு, முன்பு எப்போதையும்விட ஊடகங்களுக்கு இப்போது இருக்கிறது. மற்றொருபுறம் வானிலை, சூழலியல் நிகழ்வுகள் அனைத்துக்கும் காலநிலை மாற்றத்தைப் பொறுப்பாக்கி, பொதுமக்களுக்கு அதுகுறித்த ஒவ்வாமையை, கவன இழப்பை ஏற்படுத்தாவண்ணம் பொறுப்பான செய்திவழங்கல் முறையை ஊடகங்கள் கைகொள்ள வேண்டும். எனவே, தமிழ் ஊடகங்கள் காலநிலை மாற்றம் சார்ந்த செய்திவழங்கலை தங்கள் முதன்மைப் பணியாக மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றே நான் கருதுகிறேன்.

4) இதை ‘கனலி’ போன்ற ஒரு இலக்கிய இணையதளத்தில் கொண்டுவருவதற்கான நோக்கம் என்ன?

இன்றைக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஊடகங்களின் முதன்மைக் கவனமாக காலநிலை மாற்றம் இருக்க வேண்டும் என்பதே இதுசார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் என் போன்ற ஊடகவியலாளர்களின் நோக்கம். எனினும் அதைச் செயல்படுத்தும் வெளி இன்னும் நம் ஊடகங்களில் பரவலாக ஏற்படவில்லை. ஆனால், இந்த நிலை மாறிக் கொண்டிருக்கிறது.

என்றபோதிலும் வாய்ப்பிருக்கும் இடங்களில் தொடர்ச்சியாக இதைப் பற்றி பேசும் தேவை நமக்கிருக்கிறது. அந்த வகையில் மேம்பட்ட வாசகர்களைக் கொண்டிருக்கும் ‘கனலி’ போன்ற இலக்கிய இணையதளங்கள் மூலம் இப்படியான ஒரு முயற்சியை முன்னெடுக்கும்போது அது தமிழ் இலக்கிய, அறிவுப் புலத்தில் ஒரு விவாதத்தைத் தொடங்கிவைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது சார்ந்த உரையாடல் இலக்கிய, அறிவுத் தளத்தில் மேலெழும்போது, அது பொதுத் தளத்திலும் காரியமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது என் நம்பிக்கை.

5) காலநிலை மாற்றம் சார்ந்த ஈடுபாடு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் நான் தொடர்பியலில் பட்டமேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது (2017-2019) சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த கவனம் ஏற்பட்டு அது சார்ந்து வாசிக்கத் தொடங்கினேன். காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC) 2018ஆம் ஆண்டு வெளியிட்ட 1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை காலநிலை மாற்றம் சார்ந்த என்னுடைய கவனத்தைத் தீவிரப்படுத்தியது. படிப்பு முடிந்ததும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பணியில் சேர்ந்தேன். அதன் சுற்றுச்சூழல் இதழான ‘உயிர் மூச்சு’ இதழின் பொறுப்பாளராக பணியாற்றினேன். அது சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த என்னுடைய இதழியல் செயல்பாட்டை மேம்படுத்தியது; ஆழமான புரிதலை வழங்கியது. சூழலியலாளர் தியடோர் பாஸ்கரனின் எழுத்துகள், இதழாளர் ஆதி வள்ளியப்பன், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் ஆகியோரின் வழிகாட்டுதல்கள் என்னைச் செம்மைப்படுத்தின. மேலும் சர்வதேச ஊடகங்களைத் தொடர்ச்சியாக கவனித்துவந்ததன் மூலம் சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த உலகளாவியப் போக்கை அவதானிக்க முடிந்தது.

நம் காலத்தின் முதன்மைப் பிரச்சினையான சூழலியல் பிரச்சினை-காலநிலை நெருக்கடியை மையப்படுத்தி அரசியல், சமூகம், பொருளாதாரம், அறிவியல், தத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளின் போக்குகள் தமிழ்ச் சூழலில் எப்படி எதிரொலிக்கின்றன, தமிழ்ச் சூழல் அதற்கு எப்படி எதிர்வினை புரிகிறது என்பதில் தற்சமயம் கவனம் கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்று ‘கனலி’யின் இந்தச் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்.

நேர்காணலுக்கான ஃபேஸ்புக் சுட்டி: https://www.facebook.com/groups/485766478884841/permalink/888695358591949/

2 Replies to “கனலி ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ – ஏன்?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s