சூழலியலின் தத்துவம்

ஃபெலிக்ஸ் கடாரியின் ‘தி த்ரீ எகாலஜீஸ்’ நூலை முன்வைத்து

1

சூழலியல் என்பது வெறும் ‘இயற்கைப் பொருட்களின் தொகுப்பு’ மட்டும்மல்ல; அது சமூகம், உடல், உள்ளம் ஆகிய மூன்றின் இணைவு. இவை ஒன்றோடொன்றுப் பிரிக்கமுடியாத வகையில் இணைந்து ‘சுற்றுச்சூழல்’ ஆகிறது.

உணர்திறன்மிக்க உயிர்க்கோளத்தைக் கொண்டிருக்கும் பிரம்மாண்டச் சூழலியல் அமைப்பு, தற்போதைய நிலைக்குப் பரிணமிக்க சுமார் 450 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஓருயிரி தொடங்கி பேருயிரினங்கள்வரை இங்கு உயிர்வாழ்வை மேற்கொண்டிருக்கின்றன. புவியின் சுற்றுச்சூழல் என்பது இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயிர்ப்பன்மையின் பெருக்கமே (multiplicity) ஆகும். உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இந்தச் சூழலியல் அமைப்புகள் ஆற்றல்மிக்க வாழிடமாக விளங்குகின்றன. சூழலியல் என்பதற்கான ஆங்கிலச் சொல்லின் (Ecology) மூலம் கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது; ‘வீடு’ [eco – οἶκος] என்பது அதன் பொருள். அந்த வகையில், அறியப்பட்ட பிரபஞ்சத்தில் உயிர்களுக்கான ஒரே வீடாக இப்புவி விளங்குகிறது.

ஆனால், இயற்கை மீதான மனிதகுலத்தின் அவமதிப்பு, சூழலியலின் வயதோடு ஒப்பிடச் சாத்தியமே இல்லாத மீச்சிறு காலகட்டத்தில் அதன் தன்மையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது; இயற்கை மனிதகுல இணைவு திரிந்திருக்கிறது.

மனிதச் செயல்பாடுகளால் அதிகரித்திருக்கும் மாசு, காடழிப்பு, உயிர்ப்பன்மை இழப்பு, அற்றுப்போகும் உயிரினங்கள், மூலவளங்கள் குறைந்துவருதல், பாலையாகும் ஏரிகள், அதிதீவிர தட்பவெப்பநிலை, புவி வெப்பமாதல், கடல்மட்ட உயர்வு, அணுசக்தி மேம்பாடு உள்ளிட்டவைத் திரும்பிச் செல்லமுடியாத, எதிர்காண முடியா விளைவுகளுக்கு வழிவகுத்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான உயிரினங்கள் ஏற்கெனவே அற்றுப்போய்விட்டன (extinct). பூச்சிகளில், பறவைகளில் இருந்து விலங்குகள்வரை ஏராளமான உயிரினங்கள் தொடர்ந்து அற்றுப்போய்க் கொண்டிருக்கின்றன; யானை போன்ற பாலூட்டிகளும், புலிகளும்கூட அபாயக் கட்டத்தில் இருக்கின்றன. மிகப் பெரிய பரப்பைக் கொண்டுள்ளதால் புவியின் பெருங்கடல்கள் மனிதர்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ஆனால் மாசு, சராசரி வெப்பநிலை உயர்வு, கட்டுமீறிய மீன்பிடிப்பு போன்றவை அடையாளம் காணமுடியாத ‘காரணி’களை உருவாக்கி மீன்களின், கடல் உயிரிகளின் பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது. சூழலியக் கொலையின் (ecocide) விளிம்பில் மனிதகுலம் இப்போது நின்றுகொண்டிருக்கிறது.

இப்புவியில் கடந்த 12,000 ஆண்டுகள் நிலவிவந்த காலம், புவியியல் அடிப்படையில் ‘ஹாலோஸீன்’ (Holocene) யுகம் என்று வழங்கப்பட்டது. ஆனால் புவியின் சூழலியல் தன்மையை ஒட்டுமொத்தமாகக் குலைக்கும் வகையிலானச் செயல்பாடுகள் மூலம் முதன்மை ஆதிக்கச் சக்தியாக மனிதகுலம் உருவெடுத்திருக்கும் இந்தக் காலகட்டம், ‘ஆந்திரொபொஸீன்’ (Anthropocene) என்னும் மனித ஆதிக்க யுகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.

இந்த ‘மனித ஆதிக்க யுகம்’ என்பது மனிதவழி அழிவின் காலம் மட்டுமல்ல; சுய-விழிப்புணர்வின் அறிதல் கணமும்தான். இப்புவியின், சூழலியலின் முதன்மை அழிவு சக்தியாக தாம் உருவெடுத்திருக்கிறோம் என்ற தன்னுணர்வை மனிதகுலம் பெற்றிருக்கிறது. இக்காலகட்டத்தின் எல்லாக் கணங்களிலும் இந்தத் தன்னுணர்வு நீடித்திருக்கும் நிலை மனிதகுலத்துக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச சுற்றுச்சூழல் உடன்படிக்கைகளுக்காக அரசியல்வாதிகள் கூடும்போது மட்டுமல்லாமல், நம்முடையச் சாதாரணச் செயல்பாடுகளில்கூட சூழலியல் கேள்வி உருவாகும் வகையில் அந்தத் தன்னுணர்வு நிலைபெறத் தொடங்கியிருக்கிறது; முன்பு எப்போதும் இல்லாத வகையில் சூழலியல் சார்ந்த அறக்கணக்குகள் உருவாகியுள்ள காலகட்டமாக இது பரிணமித்துள்ளது. இந்தத் தன்னுணர்வின் கண்டறிதல் என்பது கோபர்நிகஸ், டார்வின், ஃபிராய்ட் ஆகியோரின் கண்டறிதல்களோடு ஒப்புநோக்கத்தக்கது.

மனிதச் செயல்பாட்டினால் புவியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் பேரளவிலான மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கு நாம் புவியியல், நீரியல், வேதியியல் போன்றவற்றைத் தாண்டி மேலே செல்ல வேண்டும்; இதற்கு அறிவுசார் வழிகாட்டி ஒன்று தேவை!

2

16 ஜூலை 1945 அன்று அதிகாலை 5.29 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் அணு ஆயுதச் சோதனை அறிவியல்-தொழில்நுட்பத்தின் நம்பமுடியாத சாத்தியங்களை மனிதகுலத்துக்குத் திறந்துவிட்டது; இது இயற்கைமீதான தன்னுடைய ஆதிக்கத்தை மனிதகுலம் உறுதிசெய்துவிட்ட ஒரு கணமும்கூட.

மரபணுவியல், தானியக்கம், எந்திரப்புரட்சி, பெருந்தரவுகள், செயற்கை நுண்ணறிவு, ஆழ்கற்றல், இயந்திரக் கற்றல் என அறிவியல்-தொழில்நுட்ப மாற்றங்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் மனிதகுலத்தின் அறிவெல்லையை நீட்டித்துள்ளன; அதேவேளை உலகமயமாக்கல் என்ற இன்னொரு நிகழ்வையும் அது தொடங்கிவிட்டிருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் உலகமயமாக்கல் தீவிரமடைந்தது. பனிப்போரின் முடிவும், சோவியத் ஒன்றியத்தின் உடைவும் முதலாளித்துவ அமைப்பை உலகின் பொருளாதார ஆதிக்கச் செயல்வகையாக்கின. இந்தப் பின்னணியில் உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு சமூக, சூழலியல் சிக்கல்களுக்கான வேராக ஆழம்பெற்றது; ‘வலியது வாழும்’, ‘வளர்ச்சி’ என்பன போன்ற கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த முதலாளித்துவ அமைப்பு மனித வாதையைத் தொடர்ந்து ஏற்படுத்தி, புவியின் சூழலியலை அழிக்கத் தொடங்கியது.

திறந்த சந்தை (free-market) என்ற சித்தாந்தம், உலகம் முழுக்க இயற்கை வளங்களின் பரவலான கொள்ளைக்கு வித்திட்டது. உலகச் சந்தையில் அல்லது சந்தை உலகில் நுழைவதற்காக ஏழை நாடுகள் தங்கள் உழைப்பை மிகமிகக் குறைந்த கூலிக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. நீடித்தவளர்ச்சி பற்றிய சிந்தனை இன்றி தங்கள் இயற்கை வளங்களைச் சுரண்டினர். இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது சுற்றுச்சூழல் மட்டுமல்ல, மனிதகுலத்தின் வாழ்க்கைமுறையும்தான். மற்றமை உணர்வு அதன் அனைத்துக் கூறுகளையும் இழக்கத் தொடங்கியிருக்கிறது.  

மாபெரும் வறுமையிலும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினாலும் உலக மக்கள்தொகையின் மூன்றில் ஒரு பகுதி இன்றும் வீழ்ந்துகிடக்கும் அதே வேளையில்தான், மனிதகுல வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்குத் திகைக்கச் செய்யும் அளவிலான செல்வம் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்துக்கு குறைவானோரிடம் குவிந்துகொண்டிருக்கிறது. அறிவியல்-தொழில்நுட்பத்தின் புதிய முன்னேற்றங்கள் மனிதனை விடுதலை செய்வதற்கு மாறாக இலாபத்தை நோக்கிய முதலாளித்துவத்தின் ஓட்டத்துக்குச் சேவை செய்துகொண்டிருக்கின்றன. இலாபநோக்கிலான பொருளாதாரமும் அதிகார உறவுகளும் ஒற்றைப்படையாகச் சமூக உழைப்பை நிர்வகிப்பது முட்டுச் சந்துக்கே இட்டுச்செல்லும்.

முதலாளித்துவத்தின் உலகளாவிய ஆதிக்கம் தகவல்தொடர்பின் வளர்ச்சிக்கு இணையாக நிகழ்ந்தது. உடனடித் தகவல்தொடர்பு உலகை ஒரு கிராமமாக்கியது. தகவல்தொடர்புகள் மூலம் உலகம் ஒரே சமூகமாக இணைக்கப்பட்டது.

தொழிற்சாலைக்குப் பிந்தைய முதலாளித்துவம் (Post-industrial Capitalism) [ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவம் (Integrated World Capitalism) என்று இதற்கு ஃபெலிக்ஸ் கடாரி பெயரிடுகிறார்] அதன் இருப்பிடத்தை அறியமுடியாத அளவுக்கு உலகம் முழுமைக்கும் தன் அதிகாரத்தைப் பரவச் செய்துவிட்டது; அது இருப்பிடமற்றும் எல்லையற்றும் இருக்கிறது. வன்முறை இன்றிச் சமூக ஒழுங்கைக் கொண்டுவர ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவத்தின் உச்சபட்ச ஆயுதமாக வெகுசன ஊடகம் (mass media) செயல்படுகிறது; ஸ்மார்ட்போனைக் கருவியாகக் கொண்டு இன்றைக்குச் சமூக ஊடகங்கள் அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன. இதன் மூலம் சந்தையின் புலப்படாத அழுத்தத்தினால் தனிநபர் என்ற கருத்தாக்கம் புதுவகையாகக் கட்டமைப்படுகிறது.

இந்தப் பின்னணியில் அறிவியல்-தொழில்நுட்பப் புலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மேம்பாடுகள், கைமீறிச் சென்றுகொண்டிருக்கும் சூழலியல் பிரச்சினைகளுக்கான சாத்தியமுள்ள தீர்வுகளை வழங்கி, புவியில் உயிர்கள் நீடித்திருப்பதற்கான பயன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிசெய்தாலும் செர்நோபில், ஃபுகுஷிமா, எய்ட்ஸ், கோவிட்-19 போன்றவை அறிவியல்-தொழில்நுட்பத்தின் எல்லைகளைப் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியுள்ளன.

அறிவியல்-தொழில்நுட்பம் மனிதகுலத்தின் முடிவுக்கு இட்டுச்செல்கிறது என்றால், அரசு சார்ந்த தொழில்நுட்பவாதிகளிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்ட கூட்டுமுறைகள் நமக்குத் தேவை.

இந்தப் பின்னணியில் முதலாளித்துவத்தினால் விளைந்த உலகளாவிய சூழலியல் நெருக்கடிகளைத் தத்துவரீதியாக ‘சுற்றுச்சூழல் தத்துவவியல்’ அணுகுகிறது. சமகாலத்தில் திமோதி மோர்டன் (Timothy Morton) போன்றோர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் புலத்தின் முன்னோடி நூல் ஒன்றைப் பிரெஞ்சுத் தத்துவவியலாளர் ஃபெலிக்ஸ் கடாரி 1989இல் எழுதியிருக்கிறார். ‘தி த்ரீ எகாலஜீஸ்’ (The Three Ecologies) என்ற அந்த நூல் சூழலியல் தத்துவம் சார்ந்த முதன்மை நூல்களில் ஒன்று, அது வெளியான காலகட்டத்தைவிடவும் இன்றைக்கு மிகுந்த பொருத்தப்பாடுடையதாகத் திகழ்கிறது.

ஃபெலிக்ஸ் கடாரி

3

‘சூழலியத்துவம்’ (Ecosophy – ecology + philosophy) என்ற கருத்தாக்கத்தின் மூலம் சூழலியலையும் தத்துவத்தையும் கடாரி ஒன்றிணைக்கிறார். ‘மூன்று சூழலியல்’ என்று இதன் அடிப்படைக் கூறுகளாக அவர் பட்டியலிடுபவை:

  1. சமூகச் சூழலியல் (Social ecology)
  2. உளச் சூழலியல் (Mental ecology)
  3. சுற்றுச்சூழல் சூழலியல் (Environmental ecology)

1) சமூகச் சூழலியல்: சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் மனித உறவுகளை மறுகட்டமைப்பு செய்தல்; நகர்ப்புற, பணியிடப் பின்னணியில் இணையர்களாகவும், குடும்பமாகவும் வாழும் முறைகளைத் திருத்தியமைக்கவும் மறுகண்டுபிடிப்பு செய்யவும் குறிப்பிட்ட வழக்கங்களை மேம்படுத்துதல்.

2) உளச் சூழலியல்: உடலுக்கும் தன்னிலைக்குமான உறவை மறுகண்டுபிடிப்பு செய்தல்; உயிர்ப்பு மற்றும் இறப்பின் ‘மர்மங்களை’ அறிதல்.

ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவம் வெகுசன ஊடகத்தைக் கருவியாகக் கொண்டு சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பில் செலுத்தும் தாக்கம், மனிதர்களின் தன்னிலையை ஆக்கிரமித்துள்ளது; திறந்த சந்தையின் உற்பத்தியோடு நேரடித் தொடர்புகொண்டிருக்கும் இந்த நிகழ்வு, சூழலியல் பிரச்சினைகளுக்கு எப்படி வழிவகுக்கிறது என்பதை கடாரி இந்த நூலில் ஆராய்ந்திருக்கிறார்.

புவியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி, ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவம் என்னும் புதிய வடிவிலான முதலாளித்துவ விரிவாக்கத்தின் நேரடி விளைவு என்ற கடுமையான விமர்சனத்தை இந்த நூலில் முன்வைக்கும் கடாரி, சமூக உறவுகள், மனிதர்களின் தன்னிலை ஆகியவற்றில் அதன் தாக்கத்தைச் சுற்றுச்சூழல் அக்கறை கொண்டு விவாதித்திருப்பதன் மூலம் சூழலியலுக்கான வரையறையை விரிவுபடுத்தியுள்ளார்.

இயற்கை என்பது முன்னெப்போதையும்விட பண்பாட்டில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத நிலையை எட்டியிருக்கிறது. அந்த வகையில் வெறும் மாசு என்ற அளவில் மட்டும் இப்பிரச்சினை அணுகும் அரசியல், நிர்வாக அமைப்புகள் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளும் திறனற்றவை.

இது உலகளாவியத் தீர்வை வேண்டுவது என்பதால், வெறும் தொழில்நுட்ப நோக்கிலான தீர்வுகளை மட்டும் நம்பமுடியாது. எனவே பேருரு மாற்றங்களை மேற்கொள்ளும் அதேவேளையில் உணர்திறன், நுண்ணறிவு போன்றவற்றையும் தீர்வுக்கான அணுகுமுறையில் உள்ளடக்க வேண்டும். எனவே, பொருள்வய, பொருள்வயமற்ற பொருட்களின் உற்பத்தி நோக்கங்களை நியாயமான அரசியல், சமூக, பண்பாட்டு புரட்சியால் மறுகட்டமைப்பு செய்யவேண்டும்.

உயிரினங்கள் மட்டுமே அற்றுப் போய்க்கொண்டிருக்கவில்லை, சொற்களும் சொல்லாடல்களும்தான். எனவே சமூக விடுதலைக்கான முன்னணியில் இருப்பவர்கள் இந்த மறுகட்டமைப்புக்கானக் கோட்பாட்டு வரையறைகளை மறுஉருவாக்கம் செய்வது அவசியம்.

உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகளே, புவியின் முதன்மை மாசுபாட்டாளர்கள். ஆனால் வெகுசன ஊடகம் ‘சுற்றுச்சூழல் பிரச்சினைகள்’ எங்கோ காணமுடியாத இடத்தில் நிகழ்வதாக அறிவித்து ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவத்தின் நலனுக்கே வழிவகுக்கிறது. அந்த வகையில், வரம்புகளற்ற, நவீன ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்வதற்கான வழிமுறைகளாக இந்த மூன்று சூழலியல்களின் இணைவை கடாரி வலியுறுத்துகிறார். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் சமூக, உள, சுற்றுச்சூழல் சூழலியல்கள் இன்றைய சூழலியல் பிரச்சினைகளின் தீர்வுக்கான பிரகடனமாக முன்நிற்கின்றன.

The Three Ecologies, by Félix Guattari
Translated by Ian Pindar, Paul Sutton
Bloomsbury Academic, 2014.


உதவிய கட்டுரை:


தமிழ்வெளி காலாண்டிதழில் வெளியான கட்டுரை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s