“கட்சித் தாவலைத் தொடங்கி வைத்தவர் ராஜாஜிதான்!”: எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நேர்காணல்

கூர்மையான அரசியல் பார்வையும் அங்கதமும் கொண்ட மொழியால், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல் அசைவுகளைப் பதிவுசெய்தவர் இந்திரா பார்த்தசாரதி. 90 வயதைக் கடந்த நிலையிலும் அதே தீவிரத்தோடு சமகால அரசியல் குறித்து ட்விட்டரில் எழுதுகிறார். ‘நான் 1952-ல் முதல் பொதுத்தேர்தலில் வாக்களித்தேன். இன்றும் என் வீட்டுக்கு அருகில் உள்ள நிவாச காந்தி நிலையத்தில் வாக்களித்தேன். ஒருவேளை இதுவே நான் வாக்களிக்கும் கடைசித் தேர்தலாகவும் இருக்கக் கூடும்!’ என்று தேர்தலன்று அவர் போட்ட ட்வீட் வைரலானது. தேர்தலுக்குப் பிந்தைய ஒரு மாலைப்பொழுதில் அவரைச் சந்தித்தேன். சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கம்பீரமாகப் புன்னகைத்தார். அருகில், Isabel Wilkerson எழுதி சமீபத்தில் வெளியான ‘Caste: The Origins of Our Discontents’ நூல் வாசிப்பின் இறுதியில் புக்மார்க் வைக்கப்பட்டிருக்கிறது. “ஞாபக சக்தி மட்டும் மிச்சமிருக்கு. மற்ற எல்லா உறுப்புகளும் பழுதுபட்டுப்போச்சு. வலியைக் குறைச்சுக்க ட்விட்டர் ஒரு வழி” என்று சிரிக்கிற இ.பா-விடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

“இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் நீங்கள் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?’’

“நான் அப்போது திருச்சி நேஷனல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தேன். ‘வயது வந்த எல்லோருக்கும் ஓட்டுரிமை’ என்பதில் நேரு உறுதியாக இருந்தார். ஆனால், படிக்காதவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்த்தார்கள். இப்போது சாதி ஆதிக்கம் செலுத்துவதைப்போல அப்போது நிலப்பிரப்புத்துவ அமைப்பு இருந்தது. நிலப்பிரபுக்கள் பெரும்பாலும் காங்கிரஸை ஆதரித்தார்கள். இப்போதுபோல அப்போது செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வராது. அடையாள அட்டையும் கிடையாது. பெயர்தான் அடையாளம். பெண்கள் கணவர் பேரைச் சொல்ல வேண்டும்; ஆண்கள் அப்பாவின் பேரைச் சொல்ல வேண்டும். நான் லால்குடிக்கு அருகே ஒரு கிராமத்தில் தேர்தல் அதிகாரி. ஓட்டுப்போட வந்திருந்த ஒரு பெண்ணிடம் ‘புருஷன் பெயர் என்ன?’ என்று கேட்டேன். அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது. அருகில் இன்னொரு பெண் தலையில் கனகாம்பரம் சூடியிருந்தாள். இந்தப் பெண் அதைக் காட்டினாள். ‘உன் புருஷன் பேரு கனகாம்பரமா’ என்றேன். வெட்கம் அதிகமானது. நல்லவேளையாக, தெரிந்த நபர் ஒருவர் அங்கே வந்தார். ‘அவள் கணவன் பெயர் பூங்காவனம்’ என்றார். தலையில் இருந்த பூவைக்காட்டி கையை அகல விரித்து பூ, வனம் என்று பாவனை காண்பித்திருக்கிறாள். அது எனக்குப் புரியவில்லை. இன்றைக்கு புருஷன் பெயரை பெண்கள் சொல்லத் தொடங்கியிருப்பதைத் தவிர வேறொன்றும் மாறிவிடவில்லை. தேர்தலில் பெண்களுக்குச் சம உரிமையோ, சட்டமன்றம், நாடாளுமன்ற வாய்ப்பில் பாதியோ இன்னும் நம்மால் பெற்றுத் தரமுடியவில்லை.”

“தமிழகத்தில் முதல் தேர்தல் முடிவுகள் வெளிவந்த சூழல் எப்படியிருந்தது?’’

“அப்போது தமிழகம் இல்லை. சென்னை மாகாணம்தான். காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சி நிலையில் இருந்தது. கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்றிருந்த ராஜாஜியை அழைத்து முதல்வர் பதவியை ஏற்கச் சொன்னார் நேரு. ‘Toilers party’ போன்ற கட்சிகளைக் காங்கிரஸில் சேர்த்தார் ராஜாஜி. ஆக தமிழகத்தில் கட்சித் தாவலைத் தொடங்கிவைத்த பெருமை ராஜாஜியைச் சேரும்.

தோற்றுப்போன அமைச்சர்களை ஆளுநர் ஆக்கியதும் காங்கிரஸ்தான். ஓமந்தூரார் அமைச்சரவையில் இருந்த குமாரசாமி ராஜா, தேர்தலில் தோற்ற உடனேயே ஒரிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இன்றைக்கு மோடியின் எதேச்சாதிகாரத்துக்கு வழிகாட்டியது காங்கிரஸ்தான். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்தார் நேரு.’’

“மாணவர்கள் மத்தியில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய காலம்… நீங்கள் ஏன் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்வு செய்தீர்கள்?’’

“காந்தியை மதித்தேனே தவிர, காங்கிரஸை ஒரு மிதவாதக் கட்சியாகத் தான் பார்த்தேன். சமூக சீர்திருத்தத்தைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை.அப்போது தமிழ்நாடு தனி மாநிலமாக இல்லை; ஆந்திராவும் இணைந்திருந்தது. எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி ரொம்பவே உறுதியாக இருந்தது. கல்யாணசுந்தரம், ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் இளைஞர்களை ஈர்த்தார்கள். என் அண்ணன் வெங்கடாச்சாரி கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர உறுப்பினராக இருந்தார். பிரிட்டிஷ் அரசின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்தியக் கொடியை ஏற்றியதற்காகக் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் சிறை வைக்கப்பட்டவர். நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர அண்ணனும் ஒரு காரணம்.”

“சமீபகாலமாக ட்விட்டரில் பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சிக்கிறீர்களே?’’

“பா.ஜ.க-வின் தலைவர்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தே வந்திருப்பார்கள். சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற ஆர்.எஸ்.எஸ் பின்புலம் இல்லாதவர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டிருப்பார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த தேர்தலில் பா.ஜ.க பெற்றது இரண்டு இடங்கள்தான். அத்வானிதான் அதை வளர்த்துக் கொண்டுவந்தார். இன்றைக்குத் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எல்லா மட்டத்திலும் ஊடுருவியிருக்கிறார்கள். நான் ஒரு ட்வீட் போடும்போது தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-காரர்களிடம் இருந்து எத்தனை பதில்கள் வருகின்றன தெரியுமா? அவர்கள் வரலாறே தனி… அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் வரலாறும் தனி!”

தமிழில் அரசியல் எழுத்துகளின் இன்றைய நிலை என்ன? கவனிக்கிறீர்களா?’’

“தமிழில் சமூகப் பிரச்னைகள்தான் அதிகம் எழுதப்படுகின்றன. அரசியல் பற்றி எதுவும் சமீப காலத்தில் வந்ததாகத் தெரியவில்லை. இமையம் போன்றவர்களும், இளம் எழுத்தாளர்களும் சமூகப் பிரச்னைகளைத்தான் பேசுகிறார்கள். தமிழில் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் நாவல்கள் ரொம்பக் குறைவு.’’

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கருத்துகளோடும், அரசியல் பற்றிய தவறான கற்பிதங்களோடும் இன்றைக்கு ஒரு தலைமுறையே உருவாகி நிற்கிறது. இந்த நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“மாணவர்கள் அரசியலில் ஈடுபாடின்றி இருப்பது எல்லா நாடுகளிலும் இருக்கிறது. நான் அமெரிக்காவில் இருந்திருக்கிறேன். அமெரிக்காவிலும் அரசியலில் ஈடுபாடு கொண்ட, அரசியல் உணர்வுமிக்க மாணவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். விஜய்யா, அஜித்தா என்பதுதான் இங்கு அவர்களுடைய பிரச்னை. கமல் தன்னை அதிகப்படியாக கற்பனை செய்துகொண்டு தேர்தலில் இறங்கிவிட்டார். சினிமாக்காரர்களைப் பத்திரிகைகள்தான் முன்னிறுத்துகின்றன. இப்படியான நிலைக்கு பத்திரிகைகள், ஊடகங்களும் காரணம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் அந்த உணர்வும் போர்க்குணமும் மாணவர்களுக்கு இருந்தது. சுதந்திரம் வந்துவிட்ட பிறகு சமூக ஏற்றத்தாழ்வு, இந்தித் திணிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தன. அவற்றுக்கு எதிராக மாணவர்கள் போராடினார்கள். இந்தித் திணிப்பு, மொழிப் பிரச்னை எல்லாம் இன்றைக்கும் இருக்கிறதுதான்; ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை… எனக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.’’

இப்போதைய பொழுதுகள் எப்படி நகர்கின்றன? என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்..?’’

“பழைய நினைவுகள் சில நேரங்களில் சந்தோஷத்தையும் பல நேரங்களில் வருத்தத்தையும் தருகின்றன; நான் தவறவிட்டவை நினைவில் வந்து நிற்கின்றன. செய்த தவறுகளையெல்லாம் இப்போது அதிகம் நினைத்துப் பார்க்கிறேன். வேறு என்ன சொல்வது? புதிதாக ஏதும் எழுதவில்லை. விகடனில்தான் என் முதல் கதை வந்தது. இதுதான் என் கடைசி நேர்காணலாக இருக்கும் போல் தோன்றுகிறது. அவ்வளவு வலி! நான் நோயில்லாமல் வாழ உங்கள் விருப்பங்கள் தேவை!”

(15 ஏப்ரல் 2021 ஆனந்த விகடன் இதழில் வெளியான நேர்காணல்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s