இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல்!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) ஆய்வாளர்கள் ஆ.கலையரசன், ம.விஜயபாஸ்கர் இருவரும் இணைந்து எழுதியிருக்கும் ‘The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்ற கருத்தாக்கம், இந்தியாவின் பிற மாநிலங்களைவிட தமிழகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை சமூகத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாக எப்படி உயர்த்தியிருக்கிறது என்பதைப் புதிய தரவுகளுடன் இந்த நூல் ஆராய்ந்திருக்கிறது. மாநில உரிமைகள் இன்றைக்கு ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ‘திராவிட மாடல்’ எதிர்கொள்ளும் சவால்கள், போதாமைகள், அடுத்த கட்டம் ஆகியவை பற்றியும் இந்த நூல் பேசியிருக்கிறது. இந்த நூல் பற்றி விஜயபாஸ்கரிடம் பேசினேன்.

“‘திராவிட மாடல்’ என்பது என்ன? இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படை பற்றி விளக்க முடியுமா?’’

“சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான ஓர் அரசியல் இயக்கம், ஓரளவு எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை வழங்குவது சாத்தியம் என்பதைத் தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. இதுவே ‘திராவிட மாடல்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படை. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களிலும் சாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திரட்சி நடந்தது. ஆனால், அது பொருளாதார வளர்ச்சியைத் தரவில்லை. தமிழ்நாட்டில் இந்தத் திரட்சி எப்படிப்பட்டது, எதை முன்னிறுத்தியது என்ற புள்ளியில் திராவிட மாடலை ஆராய்ந்திருக்கிறோம்.

சாதிய அடிப்படையிலேயே தொழில்கள் நிர்ணயிக்கப்படுகின்றன எனும்போது, இந்த நிலையை ஒழிக்க நவீனக் கல்வி, வேலைவாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம்தான் சமூக நீதி சாத்தியம். எல்லோரையும் உள்ளடக்கிய நவீனமயமாக்கலை (inclusive modernisation) திராவிட மாடல் முன்வைக்கிறது. இப்படிப் பரந்த தளத்தில் திராவிட மாடலை நாம் அணுகவேண்டும்.

திராவிட இயக்கம் சமூக நீதியை எப்படிப் பார்த்தது; திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு சமூக நீதியின் அடிப்படையில் என்ன மாதிரியான திட்டங்கள் வகுக்கப்பட்டன என்பதையே இந்தப் புத்தகத்தில் ஆராய்ந்திருக்கிறோம். சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக சமூகநீதி அரசியலே எல்லோருக்குமான வளர்ச்சிப் பாதையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்பதைத் தமிழ்நாடு காட்டுகிறது.”

“‘திராவிட மாடல்’ என்பது எந்தக் காலகட்டத்திலிருந்து செயல்வடிவம் பெறுகிறது? இன்று ஏன் அது முக்கியத்துவம் பெறுகிறது?’’

“தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும், சில விஷயங்களைச் செய்ய வேண்டியது கட்டாயம். சிலவற்றைச் செய்யமுடியாது என்பதும் உண்மை. சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் தமிழகத்தில் ஏற்படுத்திய சமூக நீதி சார்ந்த பொதுப்புத்தியால் விளைந்தவை இவை. தமிழ்நாட்டில் 1967-க்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் இங்கு மேற்கொண்ட திட்டங்களை வேறு மாநிலங்களில் செய்ய முடியவில்லை. இதற்கான விதை ஜஸ்டிஸ் கட்சி காலத்திலேயே இங்கு விதைக்கப்பட்டது. இன்றைக்கு மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பதுவரை இந்தப் பொதுப்புத்தியின் தாக்கம் இருக்கிறது என்பதுதான் உண்மை!

இந்தியா என்றொரு கட்டமைப்பு இருக்கிறது. அதன் மாநிலங்களில், மற்ற முன்னேறிய மாநிலங்களைவிட குறிப்பிட்ட அளவு வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது. 1970-களுக்குப் பிறகே கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகள் சார்ந்த தரவுகள் முறையாகக் கிடைக்கின்றன என்பதால், எங்களுடைய ஆய்வு அவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜஸ்டிஸ் கட்சி காலகட்டத்திலேயே மதிய உணவு, இட ஒதுக்கீடு, பொது சுகாதாரம், கல்வி மேம்பாடு போன்ற முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் தாக்கம்தான் திராவிட ஆட்சியில் தொடர்கிறது. இந்தக் கட்டமைப்புகளின் மூலம், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார நிலை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதைத் தரவுகள் மூலம் கண்டறிந்து விளக்கியிருக்கிறோம். ‘பொதுப்புத்தி’ (Common sense) என்பது எந்த அரசியல் திட்டத்துக்கும் முக்கியமானது. அது எப்படி மக்களை வடிவமைக்கிறது என்ற சிந்தனையாளர் கிராம்ஸியின் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ‘திராவிடப் பொதுப்புத்தி’யை ஆராய்ந்திருக்கிறோம்.’’

“‘திராவிட மாடல்’ என்ற ஒன்றே கிடையாது; ஒப்பீட்டளவில் தமிழ்நாடு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது, அதுவும் முந்தைய பிரிட்டிஷ் அரசு, அதைத் தொடர்ந்த காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளால் விளைந்தது. இதை திராவிடக் கட்சிகள் முன்னெடுத்துச் சென்றன. – இப்படி ‘திராவிட மாடல்’ சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை இந்த நூல் எப்படி அணுகியிருக்கிறது?’’

“அப்படியென்றால் பம்பாய், கல்கத்தா மாகாணங்களும் இதேபோன்ற வளர்ச்சியை இன்று எட்டியிருக்க வேண்டும். ஆனால், அவை எதுவும் வளர்ச்சியை நோக்கி நகரவில்லை. அப்படியே நகர்ந்தாலும், அவற்றால் அதைத் தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை. ஆனால், தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் நெறிமுறைகள் மக்களிடம் உருவாக்கிய பொதுப்புத்தியினாலும், வளர்ச்சி ஜனநாயகப்படுத்தப்பட்டதாலும் ஒப்பீட்டளவில் உள்ளடக்கிய வளர்ச்சி இங்கு சாத்தியமானது. அது இன்றுவரை தொடர்வதற்கு அரசியல் திரட்சி முக்கியக் காரணம்.”

ஆ. கலையரசன் - ம.விஜயபாஸ்கர்
ஆ. கலையரசன் – ம.விஜயபாஸ்கர்

“திராவிடக் கட்சிகளின் இலவசத் திட்டங்கள் மக்களைச் சோம்பேறிகள் ஆக்குகின்றன என்ற குற்றச்சாட்டு குறித்து?’’

“பொருளாதார நவீனமயமாக்கல் என்பது உற்பத்தித் துறை சார்ந்தது. நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டுமென்றால் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். இடது, வலது எந்த அரசியலாக இருந்தாலும், பொருளாதாரக் கட்டமைப்புக்கு இதுவே அடிப்படை. கொள்கை முடிவுகள் உற்பத்தித் துறை சார்ந்தே எடுக்கப்படுகின்றன.

மற்ற மாநிலங்களைவிடத் தமிழகம் உற்பத்தித் துறையில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. ஆட்கள் இந்தத் துறைக்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால், நவீனத் தொழில்நுட்பம், தாராளமயமாக்கல் காரணமாக வேலைவாய்ப்புகள் போதுமானவையாக இல்லை; தரமாகவும் இல்லை. இந்தப் போக்கு உலகம் முழுவதும் இருக்கிறது. இதனால்தான் இன்றைக்குக் கொள்கை முடிவுகளில் ‘உலகளாவிய அடிப்படை வருமானம்; (Universal basic income) போன்றவை பேசப்படுகின்றன. ஜனநாயக அமைப்பில், எளிய மக்கள் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இதுபோன்ற வாழ்வுரிமைத் தொகைத் திட்டங்கள் இன்றைக்குத் தவிர்க்கமுடியாதவை. ஆனால், அவை மக்களைச் சோம்பேறியாக்குகின்றன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இலவச அரிசி, பொது விநியோகத் திட்டம் ஆகியவை வறுமைக்கோட்டிலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்திருக்கின்றன என்று ஏராளமான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குடும்பநலன் சார்ந்த வேறொன்றில் முதலீடு செய்வதற்கு இலவசங்கள் உதவுகின்றன என்பதே உண்மை!”

“வளர்ச்சி, மக்கள்நலன் சார்ந்த கல்வி, சுகாதாரம் போன்றவை ‘திராவிட மாடல்’ மூலம் ஜனநாயகப்படுத்தப்பட்டிருப்பதாக உங்கள் நூல் சொல்கிறது. ஆனால், திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இடைநிலைச்சாதிகள் மட்டும்தான் வளர்ச்சியடைந்தார்கள், பட்டியலின மக்கள் வளர்ச்சியடையவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?’’

“மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது எல்லோருக்கும் பயனுள்ள, எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாகவே திராவிட மாடல் செயல்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இல்லையென்றாலும் தமிழகத்தில் இடைநிலைச் சாதிகளுக்கும், பட்டியலின சாதிகளுக்கும் இடைவெளி என்பது கிராமப்புறங்களில் ஓரளவு குறைந்திருக்கிறது. நகர்ப்புறங்களில் அது குறையவில்லை என்பது கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் சார்ந்த தரவுகளில் தெரியவருகிறது. ஆனால், நாம் எதிர்பாராத வகையில் சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வு அதிகரித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

சாதி ஒழிப்புதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம். பிற்படுத்தப்பட்ட மக்களை சமூகநீதியின் பெயரால் மேலே கொண்டுவருவதுதான் அதன் செயல்திட்டம். ஆனால், இதன்மூலம் பயன்பெற்று சமூக-பொருளாதார நிலையில் மேலே வந்துவிட்ட சாதிகள், ஒருகட்டத்தில் சாதிப் பெருமை பேசத் தொடங்குகின்றனர். இந்தப் போக்கு மதவாதத்துக்கு சாதகமாகத்தான் முடியும். இது ஆபத்தானது. இதை எதிர்கொள்ள திராவிட அரசியல் வேறுமாதிரியான நிலைப்பாடுகள் எடுக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, எல்லோருக்குமான வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வது எப்படி என்பதைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் அது இருக்கிறது!”

(6 மே 2021 ஆனந்த விகடன் இதழில் வெளியான நேர்காணல்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s