“கதைகளுக்கு அடிப்படை பரிவுதான்”: அமிதவ் கோஷ் பேட்டி

சமகால உலக இலக்கியத்தின் இந்திய முகம் அமிதவ் கோஷ். இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவை முதன்மைக் கதைக்களங்களாகக் கொண்ட இவருடைய வரலாற்றுப் புனைவு நாவல்கள் சர்வதேசப் புகழ்பெற்றவை. இந்தியாவில் இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளரான அமிதவ் கோஷின் முதல் நேரடித் தமிழ் நேர்காணல் இது!

The Doon School Weekly, History Times காலகட்டத்தில், நீங்கள் எழுத்தாளராக உருவாக உதவிய சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?”

“அவை என்னை உருவாக்கிய அனுபவங்கள் என்று சொல்வேன்; நான் ஓர் எழுத்தாளராக உருவாகிவந்த காலகட்டம் அது. இதுபோன்ற பத்திரிகைகள் இருந்த பள்ளியில் படித்தது என்னுடைய அதிர்ஷ்டம்தான். ஹ்யூக்ஸ் என்ற ஆசிரியரால் தொடங்கப் பட்ட History Times இதழின் முதல் ஆசிரியர் குழுவில் நான் இருந்தேன். குழுவில் இருந்த இன்னொருவர் என் பழைய நண்பர், இந்தியாவின் முக்கியமான வரலாற்றாய்வாளர் ராமசந்திர குஹா. ராமும் நானும் Doon School Weekly-ன் ஆசிரியர் குழுவிலும் இருந்தோம்; அங்கு கரண் தாப்பர், கன்டி பஜ்பாய் உடன் மேலும் சில திறமை வாய்ந்த நபர்களோடு நாங்கள் இருந்தது எங்கள் அதிர்ஷ்டம். விக்ரம் சேத் அதன் ஆலோசகராக சில காலம் இருந்தார். இந்தத் தொடர்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஆற்றல்மிக்கவையாக இருந்தன. அந்த உரையாடல்களில் இருந்து நான் எவ்வளவு கற்றுக் கொண்டேன் என்பதை நான் இன்னும் அளவிடக்கூட தொடங்கவில்லை.”

பெருங்கூட்டத்தில் தனித்த அடையாளத்தைப் பேசுபவை உங்களுடைய புத்தகங்கள். ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பலரும் தனித்த அடையாளத்தை இழந்து பெருங்கூட்டத்தில் ஒருவரென ஆகிக் கொண்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, மாநிலங்கள் தங்கள் பிராந்தியத்தின் மொழிமீதான உரிமையை இழந்து இந்தியை எடுத்துக்கொள்வது, இந்து ராஷ்ட்ரம், சம்ஸ்கிருத, இந்தி ஆதிக்கம் போன்றவை. இவை நம்மை எங்கு இட்டுச் செல்லும் என்று நினைக்கிறீர்கள்?”

“பா.ஜ.க சமீபத்தில் மேற்குவங்கத்தில் எழுப்பிய, முழங்கிய கோஷங்கள் இதுவரை அந்தப் பகுதிகளில் கேட்டிராதவை. இந்து மதத்தை மட்டும் புகுத்துவது அவர்களின் நோக்கமாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட வகையான வட இந்திய இந்து மதத்தை வங்கத்தின் மீது புகுத்துவதாகத் தெரிகிறது – அங்கு பண்பாடு, பாரம் பரியங்கள் எல்லாம் முற்றிலும் வித்தியாசமானவை. இருந்தபோதிலும், இந்தப் போக்கு பல காலமாக வழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். வங்கத்தில் வெகு அரிதாக மேற்கொள்ளப்படும் பூஜை வகைகளுக்கு, கடந்த பத்தாண்டுகளில் வங்கத்தில் நிறைய பக்தர்கள் உருவாகி யிருக்கிறார்கள். அதே போல், வங்கமொழியும் மிக அழுத்தமான இந்தி ஆதிக்கத்தின் கீழ் வந்திருக்கிறது.”

“பண்பாட்டு ரீதியாக இடம் மற்றும் காலத்தைப் பொறுத்த உள்ளூர்க் கதை ஒன்று உலகக் கதையாக மாற வேண்டியது அவசியமா? ஆம் என்றால், அப்படி ஆவதற்கான முக்கியத்துவம் என்ன?”

“பரிவு என்ற மனித ஆற்றலின் அடிப்படையிலேயே கதைகளும் கதை சொல்லலும் அமைந்திருக்கின்றன. நான் மற்றொருவடைய கதையையோ, என் கதா பாத்திரங்களின் கதைகளையோ சொல்வதற்கு சாத்தியமாகிறது என்றால் அதற்குக் காரணம் பரிவுதான். உள்ளூர்க் கதைகளையும்கூட இப்படித் தான் பரிவுடன் புரிந்துகொள்ள முடிகிறது. இது இலக்கியத்தின் மிகப்பெரிய வெகுமதிகளில் ஒன்று என நான் நினைக்கிறேன்.”

காலநிலை மாற்றம் சார்ந்து எதிர்காலத்துக்காக நாம் எப்படித் தயாராக வேண்டும்? இந்தப் போராட்டத்தில் நாம் ஏற்கெனவே தோற்றுவிட்டோமா? அல்லது, நாம் வாழும் நிலத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான வழிகள் ஏதும் நமக்கு உண்டா?”

“காலநிலை மாற்றத்தின் பெரிய நிகழ்வுகள் சில இப்போது தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. இந்தப் பெருந்தொற்று ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறது… எந்த இக்கட்டான காலகட்டத்திலும் இந்திய அரசாங்கம் மக்களை அவர்களின் விதிக்கு விட்டுவிடும் என்பதே அது. ஆக, அடிப்படை அறிவு கொண்ட எவரும், தங்களுக்கான சொந்த முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளத் தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கடல்மட்ட உயர்வு. தற்போது கடலோரப் பகுதியில் வாழும் சமூகங்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து அங்கு வாழ முடியாத சூழல் நிச்சயமாக உருவாகும். மாற்றுத்திட்டம் பற்றி அவர்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.”

உங்களுடைய The Great Derangement புத்தகம் வெளியான பிறகு, காலநிலை மாற்றம் பற்றிப் பேசும் இலக்கியங்கள் மேற்குலகில் அதிகமாக வரத் தொடங்கி அது ஒரு போக்காக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் கலை, இலக்கியம் – காலநிலை தொடர்பியலுக்கு எப்படிப் பங்களிக்கும் என்று நினைக்கிறீர்கள்?’’

“காலநிலை மாற்றம் பற்றிய இலக்கியங்கள் சமீப ஆண்டுகளில் உண்மையாகவே அதிகரித்துள்ளன. இதுவொரு வரவேற்கத்தக்க விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் முடிவில், காலநிலை மாற்றத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் விஷயங்களோடு ஒப்பிடும்போது எழுத்தாளர்கள் சக்தியற்ற வர்களாகவே இருக்கிறார்கள். இருப்பதிலேயே அதிமுக்கிய மான ஒன்றாக இருப்பது, மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட முயல்வதுதான். அங்கு இலக்கியமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். தமிழ்நாட்டில் அரசியல் இயக்கங்களில் எழுத்தாளர்கள் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கின்றனர். காலநிலை மாற்றம் சார்ந்த செயல்பாடுகளுக்கும் அவர்கள் அதே அளவு பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புவோம்.”

8 ஜூலை 2021 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: