“குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோமா?”

எழுத்தாளர் மா. கமலவேலன் நேர்காணல்

சாகித்திய அகாதமியின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருது, 2010ஆம் ஆண்டு முதன்முறையாகத் தமிழுக்கு ‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு) என்ற சிறார் நூலுக்கு வழங்கப்பட்டது. இந்த நூலை எழுதியவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த மா. கமலவேலன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறார் இலக்கியத்துக்குப் பங்களித்துவரும் இவர், ‘கண்ணன்’, ‘அரும்பு’, ‘கோகுலம்’, ‘சிறுவர் மணி’, ‘சுட்டி விகடன்’ உள்ளிட்ட சிறார் இதழ்களில் எழுதிவந்துள்ளார். சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பல வகை நூல்களைப் படைத்துள்ளார். எண்ணற்ற வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள், உரைச் சித்திரங்களை எழுதியுள்ளார். ‘அகில இந்திய வானொலி நாடக விழா‘க்களில் இவருடைய நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன.

தமிழில் குழந்தைகளுக்காக இவர் எழுதிய குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர். நாராயணன் வாழ்க்கை வரலாறு, ஆங்கிலம், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய ‘இந்தியா 2020’ நூலின் குழந்தைகளுக்கான வடிவத்தை இவர் எழுதியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களையும், ஆறு நாடகத் தொகுதிகளையும் எழுதியுள்ளார்.

அடிப்படையில் ஆசிரியரான இவர், அறிவொளி இயக்கத்திலும் தொடர்ச்சியாகப் பங்காற்றியுள்ளார். மாநில அரசின் நல்லாசிரியர் விருது (1998), அறிவொளி இயக்கப் பணிக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருது ஆகியவற்றையும் பெற்றவர். திண்டுக்கல்லில் அவருடைய இல்லத்தில் நிகழ்ந்த நீண்ட உரையாடலில் இருந்து…

நாடகம், வாசிப்பு, எழுத்து மீது எந்த வயதில் உங்களுக்கு ஆர்வம் பிறந்தது?

பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் தூத்துக்குடியே என்னுடைய பூர்விகம். ஆனால் நான் வளர்ந்தது, பள்ளிக் கல்வி முடித்தது எல்லாம் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் நாகப்பட்டினத்தில்தான். தூத்துக்குடி, நாகப்பட்டினம் என இரண்டுமே துறைமுக நகரங்கள். தந்தைக்குக் கடல் வாணிபம்.

நாகையில் உள்ள தேசியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அந்தப் பள்ளித் தலைமையாசிரியர் வெங்கட்ராமன், நாடகங்கள் போடுவதில் ஈடுபாடுகொண்டவர்; ஒருமுறை ‘பக்த மார்க்கண்டேயன்’ நாடகம் போட்டார். எனக்கு அதில் பிரம்மன் வேடன். ‘தேவ தேவா! மகாதேவா! இந்தக் காலதேவன் தெரியாமல் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும்’ என்பது அந்த நாடகத்தில் நான் பேசிய வசனம். ஆனால், இதற்கு 30 நாள்கள் பயிற்சி கொடுத்தார். நாடகத்தில் இடம்பெறும் அனைவருக்கும் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக பள்ளி நேரம் முடிந்ததும், ஒருமணி நேரம் தனியாகப் பயிற்சி கொடுப்பார். அன்றைக்குதான் நாடகத்துக்கான விதை என் மனதில் இடப்பட்டது. இது நடந்தது 1951.

பிறகு, நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். நான்காம் பாரத்தில் என்னுடைய வகுப்பாசிரியராக இருந்தவர் எஸ். பாலசுப்ரமணியம். பள்ளி விழாக்களுக்கு சென்னையில் இருந்தும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் இருந்தும் இலக்கியப் பிரமுகர்களை அழைத்துவருவார். மாணவர்களுக்கு அவர் மேல் பெரிய ஈர்ப்பு இருந்தது. நானும் அவர்பால் ஈர்க்கப்பட்டேன்.

மாணவப் பருவத்தில் நான் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவன், படிப்பிலும் சராசரி மாணவன், விளையாட்டிலோ ஒன்றுமே தெரியாது. பேசவும், கொஞ்சம் கதை எழுதவும் வரும் என்பதை அந்தப் பள்ளியில்தான் கண்டுகொண்டேன். என்னால் நடிக்கவும் முடியும் என்பதை வகுப்பாசிரியர்தான் எனக்கு உணர்த்தினார். ஒரு முறை ஆண்டு விழாவில், ‘வானத்தே முழங்கும் இடிக்கு அஞ்ச வேண்டாம்…’ என்று தொடங்கி 25 நிமிடங்கள் நீளும் விவேகானந்தரின் உரை ஒன்றைப் பேசச் சொன்னார். தமிழில் நானும், ஆங்கிலத்தில் மற்றொரு மாணவனும் உரையாற்றினோம்.

மா. கமலவேலன்

வாசிப்பும் அந்தக் காலத்திலேயே அறிமுகமாகியிருந்ததா?

தினமும் வீட்டில் அப்பா ஒருமணி நேரம் சிவபூசை நடத்துவார். தேவாரம், திருவாசகம் எல்லாம் அப்போதுதான் எனக்கு அறிமுகம். அவற்றைத் தொடர்ந்து கேட்டுவந்தேன்; அவை என் மனதில் ஆழமாகப் பதிந்தன. என்னுடைய இலக்கிய வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

எனக்குக் கிடைத்த தமிழாசிரியர்கள் இரண்டு பேர். ஒருவர் கலைஞர் கருணாநிதிக்கு ஆசிரியராக இருந்த தண்டபாணி தேசிகர்; பக்தி இலக்கியம் நடத்துவார். மற்றொருவர் வை. சின்னப்பா; உரைநடையும் கம்பராமாயணமும் நடத்துவார். பக்தி இலக்கியத்தையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் பற்றிச் சொல்லாமலேயே அவற்றை நடத்திய இரண்டு ஆசிரியர்களாக அவர்கள் விளங்கினார்கள்.

ஆசிரியர் சின்னப்பாவின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. அவர் என்னைச் சிந்திக்க வைத்தார். அவர்தான் என்னை எழுதத் தூண்டினார். ‘உனக்குப் பேச்சுத் திறமை இருக்கிறது; பேச்சு காற்றோடு போய்விடும், எழுத்தில் பதிவுசெய்’ என்று ஊக்குவித்து, பள்ளி ஆண்டு மலருக்கு எழுதவைத்தார். ‘ஐந்து’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை முதன்முறையாக எழுதி, அதை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். முகம் சுளிக்காமல் திருத்திக் கொடுத்தார்.

என்னுடைய பள்ளி நாள்களில் பொதுக் கட்டுரைகள் எழுதும்போது, தமிழாசிரியர்கள் சொல்லும் பாணியில் அல்லாமல், நானே சொந்தமாக எழுதத் தொடங்கினேன். சின்னப்பா ஆசிரியரும் அதை ரசித்து, மேலும் கட்டுரைகள் எழுத ஊக்குவித்தார்.

முதல் எழுத்து முயற்சி எது?

படிக்கும் காலத்தில் மிகவும் ஆடம்பரமாக இருந்தேன். கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. பதினொன்றாம் வகுப்பில் சேர்வதற்கு நான் தேர்வாகிவிட்டேன். அந்த நேரத்தில் வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை என்பதால், நீதிமன்றம் மூலமாக வீட்டை ஜப்தி செய்துவிட்டார்கள். இப்படி மிகுந்த சிரமத்துக்குப் பிறகே பதினொன்றாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றேன். ஆனால், கல்லூரிக்குச் செல்லவில்லை.

அந்த வேளையில்தான் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் புலப்பட்டது. வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையே; சம்பந்தமே இல்லாதவர்களிடம் இருந்தல்லவா நமக்கு உதவி கிடைத்துக்கொண்டிருக்கிறது. பணம் இருந்தபோது வீட்டுக்கு வந்து, தங்கிச் சென்ற சொந்தங்கள் ஒருவரும் என்னவென்று கேட்கவில்லையே என்பதை உணர்ந்தேன். மேலிருந்து கீழே விழுந்ததால், சமுதாயம் பற்றிய அருமையான பாடம் கிடைத்தது. அப்போதுதான் என்னுடைய எழுத்தார்வம் மேலோங்கியது; நாம் ஏதாவது செய்தாக வேண்டும், இருப்பை அறிவிக்கும்விதமாக செயல்பட வேண்டும் என்ற வேட்கை உருவானது. 1961இல் என்னுடைய முதல் சிறுகதை ‘புதுமை’, ‘கண்ணன்’ இதழில் வெளியானது.

1963-65 காலகட்டத்தில் ‘பிரசண்ட விகடன்’ தன்னுடைய இறுதிக் காலத்தில் இருந்தது. அதன் ஆசிரியரான நாரண. துரைக்கண்ணன் பிரபல பத்திரிகைகளால் கைவிடப்பட்டவர்களைக் கைதூக்கிவிட்டவர்களில் முக்கியமானவர்.  பிராமணர் அல்லாவதர்களுக்காகவே நடத்தப்பட்ட பத்திரிகை என்றும் அதைச் சொல்லலாம். என்னுடைய சிறுகதை ஒன்று அட்டைப்பட சிறுகதையாக ஒருமுறை வெளியானது; அதற்கு இரண்டு ரூபாய் சன்மானமும் வந்தது.

1970-களில் ‘தீபம்’ தொடங்கப்பட்டது. அது வெளியான வேளையில் ‘ஆடு ஒன்று அழைக்கிறது’ என்ற என்னுடைய சிறுகதை வெளியானது. அது அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பால் தேர்த்தெடுக்கப்பட்டது. அதைப் பற்றி ஒரு கட்டுரையும் அடுத்த மாத இதழில் வெளியானது. ‘தீப’த்தில் நான்கு கதைகள் எழுதினேன். என்னுடைய பலவீனம், தொடர்ந்து எழுதாததுதான்.

இடையில் ஆசிரியர் பணிக்கு ஏன் மாறினீரகள்?

பொதுப்பணித் துறையில் 60 ரூபாய் சம்பளத்தில் ‘ஸ்பெஷல் மேஸ்திரி’ பணிதான் என்னுடைய முதல் வேலை. ஒன்பது ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தேன். எழுதுவது பொதுப்பணித் துறைக்கு ஒத்துவராது என்றும், வேறு வேலைக்கு மாறிக்கொள்ளும்படியும் என்னுடைய மேலாளர்கள் அறிவுறுத்தினார்கள். 1966இல் திருச்சியில் வேலை பார்த்த காலத்தில், கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றினார். ஆசிரியர் பணிக்குச் செல்லும்படி அவர் யோசனை கூறினார். அது 1967; அப்போது எனக்கு 25 வயது. ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க 25 வயதுதான் கடைசி. என் அப்பாவுக்கோ ஆசிரியர் வேலை பிடிக்காது; என்றாலும் இந்த வேளையைவிட்டால், ஆசிரியர் பயிற்சிக்குச் சேரமுடியாது என்று தோன்றவே, அதற்கு விண்ணப்பித்தேன்.

வீட்டுக்கும் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. இந்த நிலையில், எனக்கு உதவுவதாக அந்த ஓட்டுநர் கூறினார். நான் நம்பிக்கையுடன் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். 60 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த எனக்கு, ஆசிரியர் பயிற்சியில் உதவித்தொகை மாதம் 18 ரூபாய்தான்; ஆனால்செலவு 30 ரூபாய்க்கு இருந்தது. சொன்னதைப் போல் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த ஓட்டுநர் மாதா மாதம் 12 ரூபாய் அனுப்பினார்.

அந்தப் படிப்பைப் படித்தவுடன் வேலை உறுதி. ஆனால், ஐந்து ஆண்டுகள் வேலை பார்ப்பேன் என்று எழுதித் தரவேண்டும். இடையில் விலகினால், உதவித்தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த முடிவினால் அப்பாவிடம் சண்டை. ஆனால், நான் உறுதியாக இருந்தேன். 1969இல் பயிற்சி முடிந்தது. வேலையும் கிடைத்தது.

அதன் பிறகுதான் குழந்தைகளுக்கு அதிகமாக எழுதத் தொடங்கினீர்களா?

பொதுப்பணித் துறையில் இருந்தபோது, சிறாருடனான உறவு குறைந்துவிட்டது. 1970ஆம் ஆண்டு ஆசிரியர் பணி பெற்றேன்.  மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் வாய்ப்பு, அப்போதுதான் கிடைத்தது.

திண்டுக்கல்லில் எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தேன். விரும்பி ஆசிரியர் பணிக்கு வந்ததால், மாணவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. மாணவர்களின் செயல்பாடுகளை கவனிக்கத் தொடங்கினேன். அதன்மூலம் அவர்களுக்கான கதைகளைச் சொல்ல முடியும் என்று நம்பினேன்.

மாணவர்களின் வாழ்க்கையை நெருங்கிப் பார்க்கத் தொடங்கிய பிறகு, அவர்களுக்காக எழுத வேண்டும், அவர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. மாணவர்களிடம் உரையாடும்போது அவர்களுடைய உளவியல், வாழ்க்கை குறித்த அவர்களின் ஆசை, கனவு, எதிர்பார்ப்பு, அவற்றின் மீது ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் எல்லையற்ற நம்பிக்கை எல்லாம் என்னை உத்வேகம் கொள்ளச் செய்தன. மாணவர்கள் இயல்பிலேயே நம்பிக்கையுடன்தான் இருப்பான், அதைக் குலைப்பவர்கள் பெரியவர்களாக இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் பணியை நாம் செய்ய வேண்டும் என்று எழுதினேன்.

கதைகள் மட்டுமல்லாமல், நாடகங்களும் எழுதினேன். எம்.எஸ்.பி. பள்ளியில் பணியாற்றிய 28 ஆண்டுகளில் 26 ஆண்டுகள் பள்ளி ஆண்டு விழாவில் என்னுடைய நாடகங்கள் தவறாமல் இடம்பெற்றிருக்கின்றன.

மற்ற எழுத்தாளர்களைவிட வானொலி சார்ந்து அதிகமாக எழுதியிருக்கிறீர்கள், பங்களித்திருக்கிறீர்கள்

வானொலி எனக்குத் தாய்வீடு. 1971இல் இருந்து என்னுடைய எழுத்துப் பணி நிலைபெறத் தொடங்கியது. அப்போதுதான் வானொலியிலும் எழுதத் தொடங்கினேன். திருச்சி வானொலியில் ‘இளைய பாரதம்’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். வானொலிதானே என்று சாதாரணமாக நினைப்போம். ஆனால், வானொலி நாடகங்கள் தனித்துவமானவை. குரலை மட்டும் கொண்டு அத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த நடிகர்கள், அற்புதக் கலைஞர்கள்.  ‘அப்பாவுக்குத் தெரியாமல்’ என்ற பெயரில் வானொலிக்கு முதன்முதலாக ஒரு சிறார் நாடகம் எழுதினேன். அது 1971 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை ஒலிப்பரப்பானது.

அப்போது நிகழ்ச்சி நிர்வாகியாக இருந்த ‘மெஹர்’ ஒருமுறை நான் எழுதிய கதை ஒன்றைக் கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டதாக என்னிடம் கூறியிருக்கிறார். தமிழில் முதன்முதலாகக் கிரிக்கெட் வர்ணனையைத் தொடங்கிய டி. கணேசன் போன்றவர்களும் என் கதைகளைப் பாராட்டியிருந்தனர்.

பெரியவர்களுக்கும் நிறைய எழுதியிருக்கிறீர்கள், இல்லையா?

எனக்கு வழிகாட்டி என்று யாரும் இருந்ததில்லை. குறிப்பிட்ட ஒரு பத்திரிகைக்கு எழுத வேண்டும் என்று நினைத்தால், அப்பத்திரிகையை ஐந்து வாரத்துக்குத் தொடர்ந்து வாசிப்பேன். அவர்களுடைய மொழிக்கும் சொல்லும் முறைக்கும், தகுந்தாற்போல் கதை ஒன்றை எழுதி அனுப்புவேன். ‘ராணி’யில் என்னுடைய கதைகள் தொடர்ந்து வெளியாயின. ‘இதயம் பேசுகிறது’ இதழுக்கு எழுதினேன். என் பெயர் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்கிற ஆசையில், ஒவ்வொரு இதழாகத் தாவிக்கொண்டிருந்தேன். அது தவறு என்று இப்போது புரிகிறது.

அதேநேரம், என்னுடைய எழுத்து, என்னுடைய எழுத்தாகத்தான் இருக்கும். பத்திரிகைகள் சார்ந்து அதை நான் மாற்றிக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில், அந்தக் கதை ஆசிரியருக்குப் பிடித்திருக்கும்பட்சத்தில் வெளியானது. ‘ஆற்றுச் சமவெளி நாகரிகம்’ என்ற என்னுடைய சிறுகதை ‘தீப’த்தில் அட்டைப் படக் கதையாக வெளியானது. எனக்குப் பேர் வாங்கித் தந்த அந்தக் கதையைத் தேர்வு செய்யும்போது வல்லிக்கண்ணன் ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார்.

அவருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, என் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. ‘எல்லா பத்திரிகைக்கும் நீங்க எழுதுறீங்க; ஆனால், எல்லோரும் எல்லாமும் வெளியிட மாட்டாங்க. அவரவர்களுக்கு ஒரு கொள்கை, வரையறை இருக்கும். நீங்க சோர்வடையாதீங்க… தொடர்ந்து முயற்சி பண்ணுங்க’ என்று ஊக்கமளிப்பார்.

ஆசிரியர் பணியின் நீட்சியாகத்தான் அறிவொளி இயக்கத்தில் பங்கெடுத்தீர்களா? அந்தப் பணியைப் பாராட்டும் விதத்தில் விருதும் பெற்றிருக்கிறீர்கள்

‘தமிழ்நாடு அறிவியல் இயக்க’த்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுள் ஒருவராகப் பணியாற்றினேன். அது எனக்கு மிகப் பெரிய அனுபவத்தை வழங்கியது. என் வாழ்க்கையில் அதுவரை சந்தித்திராத மனிதர்களைச் சந்தித்தேன்; மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா என்று என்னைத் திகைப்பில் ஆழ்த்திய அனுபவங்கள் அவை. நான் அதுவரை கற்பனையில் வாழ்ந்திருக்கிறேன் என்பது உரைத்தது. என்னை யதார்த்த வாழ்க்கைக்குக் கொண்டுவந்தது, அறிவியல் இயக்கச் செயல்பாடுகளில் பெற்ற அனுபவங்களே.

அறிவொளி இயக்கம் கையெழுத்துப் போடுவதற்குக் கற்றுத்தரும் ஓர் அமைப்பு என்ற விமர்சனம் பொதுவாக மக்களிடம் இருந்தது. உண்மையில், அந்த மக்களிடம் இருந்து நாங்கள்தான் கற்றுக்கொண்டோம். படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நாம் ஒதுக்கிவைத்திருக்கும் அவர்களிடம் இருக்கும் அனுபவம், பட்டறிவு, பண்பாடு ஆகியவை நம்மைவிட மேம்பட்டிருக்கின்றன.

திண்டுக்கல்லின் மலைக்கிராமங்களில் ஒருமுறை மாலை வகுப்புகளை ஒருங்கிணைத்தபோது, மின்விளக்குக்காக நீண்ட தூரத்தில் இருந்து மின்இணைப்பைக் கொண்டுவந்திருந்தார்கள். அருகில் உள்ள வீட்டில் பெற்றிருக்கலாமே என்று கேட்டபோது, அதற்கு அந்த வீட்டுக்காரர்கள் அனுமதிக்கவில்லை என்றார்கள். ஏற்றத்தாழ்வு குறித்து பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் அதிகப்படியாக சொல்கிறார்களோ என்று நான் நினைத்ததுண்டு. அது உண்மைதான் என்பதை, இதுபோன்ற நிகழ்வுகளில் நேரடியாகக் கண்டுகொண்டேன். என்னுடைய அறிவொளி இயக்கப் பணிகளுக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்றிருக்கிறேன்.

இன்றைய சிறார் இலக்கியம், சிறார் எழுத்தாளர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்றைக்கு நிறைய பேர் சிறார் இலக்கியம் எழுதத் தொடங்கியுள்ளார்கள். சிறாரின் மனப்பான்மை மாறியிருக்கிறது; மேம்பட்டிருக்கிறது. சிறார் இலக்கியம் படைப்பவர்கள் அதற்கேற்ப பேசுபொருள்களை கதைகளில் கொண்டுவர வேண்டும். இன்றைய சிறார் யார், அவர்களின் உலகம் என்ன என்பதைப் பற்றிய புரிதல் சிறார் இலக்கியம் படைப்பவர்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்வில் நுழைந்து, அதை எழுத்தில் கொண்டுவர முடியும்.

அன்றைக்கு இருந்த பெரியவர்களுக்கான இதழில் சிறாருக்கான பகுதியும் இருந்தது. ‘ஆனந்த விகட’னில் சிறுவர் பகுதி என்று 16 பக்கத்தை ஒதுக்கியிருந்தார்கள். கல்கியிலும் சிறுவர் பகுதி இருந்தது. குழந்தைகள் எனும் நாற்று நன்றாக இருந்தால்தான், எதிர்காலம் சிறக்கும் என்ற சமுதாயப் பார்வை அன்றைக்கு இருந்தது. ஆனால், இன்றைக்கு சிறார் இதழ்கள் வரிசையாக நின்றுபோகின்றன.

கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருக்கிறது. அவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கிறார்கள்? சிறார் இதழ்கள் நின்றுபோவதற்கு பெற்றோரும் ஒரு முக்கியக் காரணம். அதேபோல் பதிப்பிக்கப்படும் நூல்களில் சிறார் நூல்கள் மிகக் குறைவு; அவையும் பெரிய அளவில் விற்பனையாவது இல்லை; நூலக ஆணையும் கிடைப்பதில்லை!

இந்த அம்சங்கள் எல்லாமே மாற வேண்டும். சிறார் இலக்கியம் மேம்பட அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டும். சாகித்திய அகாடமியைப் போன்ற ஓர் அரசு அமைப்பே நீண்ட காலத்துக்குப் பிறகு, 2010இல்தான் சிறார் இலக்கியத்துக்கான அங்கீகாரத்தை தேசிய அளவில் தரத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற பல விஷயங்களை விரைவுபடுத்தி, புதுமையான முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறார் இலக்கியத்தை வளர்த்தெடுப்பது சாத்தியப்படும்.

***

{இந்து தமிழ் திசை – தீபாவளி மலர் 2020இல் வெளியானது}

Leave a comment