‘1969 ஜனவரி, தேவராயன் ஏரியில் ஓர் அதிகாலை’

2022 ஜூன் 24, 25 தேதிகளில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நடத்திய ‘தாராபுரம் தந்த இரு அறிவுக்கொடையாளர்கள்: தியோடர் பாஸ்கரன், எஸ்.வி.ராஜதுரை வாழ்நாள் அறிவுப்பணி குறித்த இரு நாள் கருத்தரங்’கில் சு. தியடோர் பாஸ்கரனின் சூழலியல் எழுத்துகள் பற்றி நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இங்கே. நேற்று (மார்ச் 2, சனிக்கிழமை) ஈரோட்டில் மருத்துவர் ஜீவா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தியடோர் பாஸ்கரனுக்குப் ‘பசுமை விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது (இந்த ஆண்டுக்கான மற்றொரு விருது ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்துக்கு வழங்கப்பட்டது). அந்நிகழ்வில் பாஸ்கரனுடன் நான் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. இந்தப் பின்னணியில், மேற்சொன்ன கருத்தரங்கில் நான் வாசித்தக் கட்டுரையை இங்குப் பதிவிடுகிறேன். கருத்தரங்கில் பேச வாய்ப்பளித்த ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு என் நன்றி; ஒளிப்படம் எடுத்துத் தந்த நான் பா. மனோவுக்கு மிக்க அன்பு.

1

1973ஆம் ஆண்டு. சேப்பாக்கம் அரசு விடுதியில் தங்கியிருந்த சாலிம் அலியைத் தியடோர் பாஸ்கரனும் அவரது நண்பர் சித்தார்த்தும் சந்தித்துப் பேசியபோது சித்தார்த் சாலிமிடம் உற்சாகமாகக் கூறினார்: ‘நீங்கள் எழுதிய பறவைகள் கையேடு பலருடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்டதென்று உங்களுக்குத் தெரியுமா?’

அத்தகைய உற்சாகத்துடன் தியடோர் பாஸ்கரனின் எழுத்து என்னுடைய வாழ்க்கையின் போக்கை எப்படி மாற்றிவிட்டது என்பதைச் சுருக்கமாகப் பகிர விரும்புகிறேன்.

தியடோர் பாஸ்கரன் ‘உயிர்மை’யில் எழுதிய கட்டுரைகள்தான் வாசிப்பில் சூழலியல் சார்ந்தும் என்னுடைய ஈடுபாட்டைத் தொடங்கிவைத்தன. பள்ளி இறுதி வகுப்பில் தொடங்கிய சூழலியல் சார்ந்த ஈடுபாடு மிக மெதுவாகவே வளர்ந்துவந்தது. புதுவை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது நான் கொண்டுவந்த ‘The Madras Magazine’ இதழில் சென்னையின் சூழலியலைப் பற்றிய பாஸ்கரனின் கட்டுரை இடம்பெற வேண்டும் என விரும்பினேன். அப்படித் தான் முதலில் அவரைத் தொடர்புகொண்டேன். Indian Seminar இதழில் ஏற்கெனவே வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தார். அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் தான் அவரை முதன் முதலில் சந்தித்தேன்; இன்று அதே நூலகத்தில் அவரைப் பற்றிக் கட்டுரை வாசிக்கிறேன்.

காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அமைப்பு (ஐபிசிசி) 2018 அக்டோபரில் 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. சூழலியலில் என்னுடைய ஈடுபாடு ஆழம்பெற ஒரு திருப்புமுனையாக அந்த அறிக்கை அமைந்தது. காலநிலை மாற்றம் சார்ந்து நான் வாசிக்கத் தொடங்கியது அப்படித்தான். அந்தச் சூழலில்தான் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பனிடம் பணியிடப் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது; வள்ளியப்பனை நான் முதலில் சந்தித்ததும் அப்போதுதான். அவருடனான அறிமுகம் சூழலியல் – காலநிலை மாற்றம் சார்ந்த என்னுடைய கவனத்தை ஆழப்படுத்தியது.

பல்கலைக்கழகப் படிப்பு முடிந்த கையோடு நான் ‘இந்து தமிழ் திசை’யில் பணிக்குச் சேர்ந்தேன்; வள்ளியப்பனின் அணியில் ‘உயிர் மூச்சு’ இணைப்பிதழ் சார்ந்த பணிகளில் நான் ஈடுபட்டுவந்தேன். சூழலியல் சார்ந்து தொடங்க நிலையிலிருந்து அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்துவந்த ஈடுபாடு எழுத்தில் வடிவம் பெறத் தொடங்கியது இந்தக் காலகட்டத்தில்தான்.

பணியிடப் பயிற்சியின்போதும் பணிக்கு வந்துவிட்ட பிறகும் சூழலியல் எழுத்துசார்ந்த எல்லா உரையாடல்களிலும் வள்ளியப்பன் தவறாமல் உச்சரிக்கும் ஒரு பெயர் தியடோர் பாஸ்கரன். பாஸ்கரனின் எழுத்துகள் வழியும் அவருடனான நேரடிப் பழக்கத்தின் மூலமும் பெற்ற அனுபவங்களை வள்ளியப்பனிடமிருந்து நான் இந்தக் காலகட்டத்தில் பெற்றுக் கொண்டேன். பாஸ்கரனின் செல்வாக்கு தலைமுறைகள் கடந்து இப்படித்தான் என்னை உருவாக்கியது.

2

“சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையை மனிதருக்கு ஊட்ட வேண்டுமானால் அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே இயற்கையின் நெருக்கத்தை அனுபவிக்க வைக்க வேண்டும். மற்ற உயிரினங்களுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்க வேண்டும். புறவுலகு மீது ஈடுபாடு இருக்க வேண்டும்” என்கிற தியடோர் பாஸ்கரனின் கூற்று அவரது பால்யத்தின் நேரடி விளைவுதான்.

தியடோர் பாஸ்கரனின் பால்யம் அமராவது நதிக்கரையில் கழிந்திருக்கிறது. அவரது தந்தையின் வேட்டை ஆர்வம், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் வேட்டையாடியுமான தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்து தனது மகனுக்கான பெயரை எடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்வழிப் பள்ளிக் கல்வி மொழியுடனான பாஸ்கரனின் உறவை சிறுவயதிலேயே ஆழப்படுத்தியிருக்கிறது. சென்னை கிறித்துவக் கல்லூரி வாசம், பறவை நோக்குதல் போன்ற ஈடுபாடுகள் இயற்கையை நோக்கி அவரை உந்தித் தள்ளின.

அப்படித் தான் ஒருமுறை திருச்சிக்கு அருகேயுள்ள தேவராயன் ஏரிக்கு ஜனவரி 1969 அதிகாலையில் பறவை நோக்குதலுக்குச் செல்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி அதைப் பற்றி அவரை எழுதத் தூண்டுகிறது. இமயத்திலிருந்து வந்திருந்த, அங்கு அவர் கண்ட பட்டைத்தலை வாத்து பற்றி ஆர்வத்தின் பெயரால் தோன்றியதை எல்லாம் எழுதிவிடாமல், வனத்துறை அலுவலகத்துக்குச் சென்று அதுகுறித்து ஆராய்ச்சி செய்து எழுதுகிறார்; அதை ‘தி இந்து’ நாளிதழுக்கு அனுப்பிவைக்கிறார். கட்டுரை பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியரிடமிருந்து வந்த கடிதம், எழுத வேண்டும் என்கிற பாஸ்கரனின் சிறுவயதுக் கனவுக்குச் செயல்வடிவம் தந்தது.

நன்றி: தியடோர் பாஸ்கரன் ஃபேஸ்புக் பதிவு

அந்த வகையில், தியடோர் பாஸ்கரன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சூழலியல் சார்ந்து தொடர்ச்சியாக எழுதிவந்திருப்பதன் பின்னணியில் இயற்கையோடு இயைந்து வளர்ந்த அவரது பால்யம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், 1990-களின் இறுதி ஆண்டுகளில் பிறந்த என் தலைமுறையினர் சூழலியல் சிதைவிலிருந்துதான் அதுகுறித்த அறிமுகம் பெறுகிறோம்; எங்கள் தலைமுறைக்கு அறிமுகமான முதல் இயற்கைப் பெருநிகழ்வு – சுனாமி. முன்னொரு காலத்தில் எல்லாம் இல்லை, மிகச் சமீபத்திய காலகட்டம் வரை தமிழ்நாட்டின் இந்தப் பகுதிகளில் எல்லாம் இயற்கையின் இயக்கம் இப்படி இருந்தது என்பதை பாஸ்கரனின் எழுத்து அறியத் தருகிறது.

ஆனால், சமீப காலத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “சில நாட்களுக்கு முன் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்தபோது கவனித்த ஒரு காட்சி என்னை மிகவும் பாதித்தது. இது வலசை பருவம் என்றாலும் ஏரிகளிலும் வானிலும் வெகு சில பறவைகளே கண்ணில் பட்டன. எழுபதுகளில் இதே ஏரிகளில் நிறைய நீர்ப்பறவைகள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். கடந்த அரை நூற்றாண்டில் 60 சதவீதம் காட்டுயிர் அழிக்கப்பட்டுவிட்டது என்ற கணிப்பு அண்மையில் வெளியானது.”

பாஸ்கரன் எழுதத் தொடங்கிய 70-களின் தொடக்கத்தில் தான் சூழலியல் குறித்த சொல்லாடல்கள் சர்வதேச அளவில் நிகழத் தொடங்கின. ஆனால், தமிழில் அது எதிரொலிக்கவில்லை என்பதை அவர் வருத்தத்துடன் பதிவுசெய்கிறார். இப்பொருள் பற்றி எழுதத் தொடங்கிய உடனே மொழி சார்ந்த பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. “ஒரு சமூகத்தில் புதிய புதிய கரிசனங்கள் உருவாகும்போது அக்கரிசனங்கள் வளர வேண்டுமென்றால், மொழியின் விரிவாற்றலைப் பயன்படுத்தி புதிய அக்கறைகளைப் பற்றிய சொல்லாடலை உருவாக்க வேண்டும்” என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

3

அடிப்படையில் நான் ஒரு ஊடகவியலாளன் என்பதால், மொழிதான் என்னுடைய இயங்குதளம், கருவி என்பதாலும் அதுகுறித்த சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

புவியின் மிகப் பெரிய பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்திருக்கும் நிலையில், மனிதகுலம் இன்று வந்தடைந்திருக்கும் இடம் பற்றிய புரிதலையும், இத்தகைய வாழ்வாதாரச் சிக்கலுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி (ஒருவேளை நம்பிக்கையுடன்) பயணப்படுவதற்குமான அறிவையும் வழங்கும் முதன்மைப் பணி ஊடகங்களையும் கலைஞர்களையுமே சார்ந்தது என்று நான் நம்புகிறேன்.

உலக மொழிகளில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சுட்டும் சொற்கள் தெரிவு செய்யப்பட்டு, அவை மொழிபெயர்க்கப்படாமல் காலநிலை சார்ந்த சொல்லாடல்களில் நேரடியாக ஆங்கிலத்திலேயே பயன்படுத்தும் வண்ணம் An Ecotopian Lexicon என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மிக நீண்ட சூழலியல் பாரம்பரியமும் அறிவும் மொழிவளமும் கொண்ட தமிழில் இருந்து குறைந்தது ஐந்து சொற்களாவது இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், “காட்டுயிர் சார்ந்த தமிழ்ப்பெயர்களைப் பட்டியலிட இதுவரை சீரிய, ஒன்றிணைந்த முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மா.கிருஷ்ணன் நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் எழுதிய தமிழ்க் கட்டுரைகளில் பாரம்பரிய தமிழ்ப்பெயர்களைப் பயன்படுத்துகின்றார். 1954இல் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தில் பல பெயர்கள் இடம்பெற்றன,” என்று தமிழின் நிலையை பாஸ்கரன் எழுதுகிறார்.

4

ரேச்சல் கார்சன் எழுதிய ‘சைலெண்ட் ஸ்பிரிங்’ (1962), பால் எர்லீஷ் எழுதிய ‘தி பாபுலேஷன் பாம்’ (1968), கிளப் ஆஃப் ரோம்-ன் ‘தி லிமிட்ஸ் டூ குரோத்’ (1972), ஆகிய புத்தகங்களின் வெளியீடும், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 1972இல் நடந்த முதல் மனித சுற்றுச்சூழல் குறித்த ஐ.நா.வின் மாநாட்டில் இந்திரா காந்தி ஆற்றிய உரை ஆகியவையே உலகளாவிய சுற்றுச்சூழல் சொல்லாடலை வடிவமைத்த நான்கு முக்கிய நிகழ்வுகள் என்கிறார் பொருளியலாளர் தாரிக் பனுரி. இந்திரா உரையாற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாநாட்டின் ஐம்பதாம் ஆண்டில், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டெண்-2022 அறிக்கையில், இந்தியா கடைசி நாடாக இடம்பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் செயலாற்ற வலியுறுத்தி, தனியாகப் போராடத் தொடங்கிய ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரெட்டா துன்பர்க்கின் ‘பள்ளி வேலைநிறுத்தப் போராட்டம்’ 200ஆவது வாரத்தை எட்டியிருக்கிறது. உலக இளையோரிடம் ஓர் அலையாகப் பரவிய கிரெட்டாவின் முன்னெடுப்பு மேற்குலக அரசியவாதிகளிடம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “சூழலியல் கரிசனம் ஒரு பாடமல்ல, அது ஒரு விழிப்பு. ஒரு பார்வைக்கோணம். நாம் வாழும் உலகைப் பற்றிய அடிப்படையான புரிதல். எந்த ஒரு புதிய கரிசனத்திற்கும் மொழி முதலில் தயார்ப்படுத்தப்பட வேண்டும்,” என்கிறார் பாஸ்கரன்.

அந்த வகையில்,

  1. ‘கையிலிருக்கும் பூமி’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 100 கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாக மலிவு விலையில் மாணவர் பதிப்பைக் கொண்டுவந்து பள்ளி மாணவர்களிடையே பரவலாக்க வேண்டும்.
  2. சூழலியல் சார்ந்த தமிழ்ச் சொற்களைத் தொகுத்து கலைச் சொல் அகராதி ஒன்றை உடனடியாக உருவாகுதல் வேண்டும்.
  3. சூழலியல் சார்ந்த சர்வதேச சொல்லாடல்களை வடிவமைத்துக் கொண்டிருக்கும் நூல்களைச் சீரிய முறையில் மொழிபெயர்த்து தமிழில் சூழலியல் மொழியின் எல்லையை விரிவாக்க வேண்டும்.

5

மானுட அறிவு, பிரபஞ்சத்தின் அறியப்பட்ட எல்லைக்குள் இப்புவியைத் தவிர மனிதர்கள் வேறு எங்கும் வாழவில்லை என்று கண்டறிந்திருக்கிறது. எனவே, மனிதர்கள் வாழும் ஒரே கோளாக புவி இப்பிரபஞ்சத்தில் தனித்திருக்கிறது; ஆனால், புவியில் மனிதர்கள் தனித்திருக்கவில்லை. உயிருள்ளவை, உயிரற்றவை என மனிதரின் கற்பனைக்கும், பார்வைக்கும் அறியப்படாத எண்ணிலடங்கா உயிர்களைக்கொண்ட புவியின் உயிர்ப்பன்மை மனிதகுலத்தால் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் தனித்திருக்கும் நாம், நம் பிள்ளைகளைப் புவியில் தனித்திருக்கச் செய்யப் போகிறோமா… ‘கையிலிருக்கும் பூமி’ என்பது ஒரு பிரகடனத்தின் தொடர்ச்சியாக, இன்னும் பிறக்காத தலைமுறைக்காக ‘பூமி இழந்திடேல்’ என்ற அறைகூவலுடன் என் உரையை நிறைவுசெய்கிறேன்.

***

படம்: நான் பா.மனோ

Leave a comment