முரகாமி எப்படிச் சிந்திக்கிறார்?

ஹாருகி முரகாமி. ஜப்பானியர் எனினும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் 50 மொழிகளிலும் அவர் அந்த மொழியின் எழுத்தாளராகவே கருதப்படும் அளவுக்குப் புகழ்பெற்றிருப்பவர்; குறைந்தபட்சம் தமிழில். 73 வயதாகும் முரகாமி 1979 தொடங்கி இதுவரை 14 நாவல்கள் எழுதியிருக்கிறார்; கடைசியாக வெளியான நாவல் Killing Commendatore (2017). ஒரு மாரத்தான் ஓட்டக்காரரான முரகாமி, தன் எழுத்தின் ஓட்டம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகச் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ‘Novelist as a Vocation’. இத்தொகுப்பின் முதல் ஆறு கட்டுரைகள், ‘குரங்கு’ (ஆம், குரங்குதான்) என்ற ஜப்பானிய மொழி இலக்கியப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தன; மற்ற ஐந்து கட்டுரைகள் இத்தொகுப்பாகப் பிரத்யேகமாக எழுதப்பட்டிருக்கின்றன.

“நான் நாவலாசிரியனாக இருப்பது பற்றியும் நாவல்கள் எழுதுவது பற்றியும் ஏதாவது [சொல்ல] எழுத வேண்டும் என நீண்டகாலமாய் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆகவே சிறிது சிறிதாக என்னுடைய சிந்தனைகளைத் தொகுக்கத் தொடங்கினேன், தலைப்பு வாரியாக அவற்றை ஒருங்கிணைத்தேன். பதிப்பாளரின் வேண்டுகோளுக்காக நான் இதை எழுதவில்லை. மாறாக இது என் நிமித்தமான ஒரு சொந்த முன்னெடுப்புதான் [ . . .] 2015இல் ஜப்பானில் வெளியான இந்நூல், இப்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகள் இடைவெளியில் கரோனா பெருந்தொற்று, போர் என எல்லா வகையான ‘அனுபவ’ங்களையும் நாம் எதிர்கொண்டுவிட்டோம். இந்த நிகழ்வுகள் நம் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களுக்கு நம்மை உந்தின. [ஆனால்] இந்தக் கட்டுரைகள் அந்த மாற்றங்களையோ நான் எதிர்கொண்ட தனிப்பட்ட மாற்றங்களையோ பிரபலிப்பவை அல்ல. இவை 2015 வரையிலான என்னுடைய சிந்தனைகளும் உணர்வுகளுமே,” என முன்னுரையில் முரகாமி எழுதுகிறார். என் மனம் இந்த இடத்திலிருந்து எழுந்து நடக்கத் தொடங்கிவிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எங்கிருந்தேன், என்ன செய்துகொண்டிருந்தேன் என்கிற சிந்தனை நேற்று காலை கண்விழித்ததும் வெட்டிச் சென்றது. நேற்றைய காலை நடையில் இதுகுறித்து கால்களாலும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் புதுவைப் பல்கலைக்கழக தொடர்பியல் மாணவனாக இருந்தேன். தொழில்முறை இதழாளனாகப் பரிணமிப்பதற்கான கல்விப் பயிற்சி தொடங்கியிருந்தது. புத்தகங்களும் கோதார்ட், ஃபூக்கோ, ஆண்டனி ஷடீட் போஸ்டர்களும் சூழ வால்மீகி விடுதி அறை எண் 72 என் வாழிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில், அன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பது குறித்த யோசனைகளால் அவ்வப்போது பின்னப்பட்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது; ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதும். தொழில்முறையிலும், சிந்தனைரீதியாகவும் இந்த ஆண்டுகளில் நான் கடந்துவந்திருக்கும் தொலைவு, நான் மேற்கொண்டிருக்கும் பணிகளின் பின்னணியில் ஒருவாறு நிறைவளிக்கிறது. ஆனால், சோவியத் உடைவின் 30 ஆண்டுகள், காலநிலை இலக்கியம் (Climate fiction) உள்ளிட்டவை சார்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் நான் திட்டமிட்ட பல பணிகள் அன்றாடத்தின் அலைகளால் கரையொதுங்கி நிற்கின்றன; இது குற்றச்சாட்டு இல்லை, ஒரு பதிவு அவ்வளவே.

இந்தப் பின்னணியில், முரகாமியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வருகை என்னைக் குலுக்கிவிட்டிருக்கிறது (சில பல ஆண்டுகள் கழித்து வேறெங்காவது இதன் வாசிப்பனுபவம் குறித்த குறிப்பை நான் எழுதக் கூடும்). எழுத்தாளர் ஒருவரின் மன இயக்கத்தை, அவரது படைப்புகளை வரைபடமாக்கும் ஒரு நூலாகத் தமிழில் (எனக்குத் தெரிந்து) ‘வேட்டையில் அகப்படாத விலங்கு: கோணங்கியின் புனைவுரு’ இருக்கிறது. மா.அரங்கநாதனின் நேர்காணல் நூலான ‘இன்மை அனுபூதி இலக்கிய’மும் அப்படியே. சட்டென நினைவுக்கு வரவில்லை, இப்படியான நூல்கள் வேறு யாவை?

For H.A., a devoted reader of H.M.


  1. Killing Commendatore வெளியானபோது முரகாமி, நியூ யார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியை மொழிபெயர்த்திருந்தேன்: “நான் கனவு காண வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நான் எழுதுகிறேன்”: ஹாருகி முரகாமி
  2. பாரிஸ் ரெவ்யூ நேர்காணல் — Haruki Murakami, The Art of Fiction No. 182

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: